Politics
முன் விரோத தகராறு.. துணை நடிகருக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் பரபரப்பு!

சென்னை திருவொற்றியூரில் துணை நடிகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் 29 வயதான பிரதீப் ராஜ். இவர் சினிமாவில் துணை நடிகராகவும், பட வாய்ப்பு இல்லாதபோது துறைமுக வளாகத்தில் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது அம்மா ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் கடனாக 9 லட்சம் பெற்று விட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 26-ம் தேதி நவநீதம், பிரதீப் ராஜ் வீட்டுக்கு சென்று அவரது தாயார் ராணியிடம் பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது பிரதீப் ராஜ், அவரது அம்மா ராணி, மைத்துனர் சதீஷ் , சகோதரி லாவண்யா, தந்தை டில்லி பாபு ஆகியோர் சேர்ந்து கொண்டு பணத்தை திருப்பித் தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த நவநீதம் தைராய்டு மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். நவநீதம் கொடுத்த புகாரின்பேரில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு, மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் திருவெற்றியூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரதீப்ராஜை கைது செய்தனர். பிரதீப்ராஜ் கைது செய்யப்பட்ட அதே நாளில் ஜாமினில் வெளிவந்து விட்டார்.
இந்த நிலையில் புதன் அன்று இரவு திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நவநீதத்தின் மகன் நவீன்குமார் தலைமையில் வந்த நபர்கள் பிரதீப் ராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். கொலை செய்து விட்டு மாதவரத்தில் பதுங்கி இருந்த நவீன்குமார், ஹரி, ஜாபர், லோகேஷ் ஆகிய நான்கு பேரை திருவள்ளூர் போலீசார் வியாழன் அன்று அதிகாலை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை.. தீவிர விசாரணை
கொலையாளிகளில் முக்கிய நபரான நவீனிடம் விசாரித்த போது, அவர் தனது வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். நவீன்குமாரின் தாயார் நவநீதம் டிபன் கடை நடத்தும் இடத்துக்கு அருகே ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதீப் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி நவநீதம் தரப்புக்கும் பிரதீப் ராஜுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் பிரச்சினை ஏற்படும் என்பதால் திருவொற்றியூர் போலீசார் பிரதீப் ராஜ் தரப்பையும், நவநீதம் தரப்பையும் அழைத்து பேசியுள்ளனர். உங்கள் சொந்த பிரச்சனையால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அப்போது தன் மீது பொய்ப் புகார் கொடுத்து கைது செய்ய வைத்த நவநீதம் குடும்பத்தினரை சும்மா விடமாட்டேன் என பிரதீப் ராஜ் கூறியதாக தெரியவருகிறது.
போலீசார் முன்னிலையில் தங்களை அவமானப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாத நவநீதத்தின் மகன் நவீன் குமார், நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் ராஜை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நவீன்குமாரும் இதே தகவலை வாக்குமூலமாக கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரவுடிகள் சிலர் தன்னை செல்போனில் மிரட்டுவதாக பிரதீப்ராஜ் கூறிவந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதியில் மேலும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
