Politics
போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து பேட்டி கொடுத்த வாலிபர் படுகொலை

சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றஞ்சாட்டி பேட்டி அளித்த 30 வயது வாலிபர், மறுநாளே வெட்டிக் கொல்லப் பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ், 30. இவர், நேற்றிரவு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், அவரது ஸ்கூட்டர் மீது மோதினர்.
நிலைதடுமாறி கீழே விழுந்த பிரதீப் ராஜை, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
திருவொற்றியூர் போலீசா ரின் விசாரணையில், நவநீதம் என்பவரிடமிருந்து, பிரதீப் ராஜின் தாய் வட்டிக்கு பணம் வாங்கி, தனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். சிலர் பணம் கட்ட தவறியதால், பிரதீப் ராஜ் மற்றும் அவரது தாயிடம் கேட்டு நச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் உள்ளது. இந்த நிலையில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்படுவதற்கு முன், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பிரதீப் ராஜ் கூறுகையில், ''என் தாய் வாங்கி கொடுத்த கடனுக்காக, ரவுடிகள் என்னை மிரட்டி வருகின்றனர். அதற்கு போலீசார் என் மீது பொய் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.
''ஆய்வாளர் அழைத்து, 'உன் கை, காலை உடைத்து விடுவேன்; வெட்டி திருச்செந்துாரில் கரைப்பேன்' என, மிரட்டினார். மேலும், ரவுடி ராதாகிருஷ்ணனிடம் பேசு; வழக்கறிஞர் வந்தாலும் எதுவும் பண்ண முடியாது,'' என்றார்.
இன்ஸ்பெக்டர் குறித்து நேற்று முன்தினம் அவர் பேட்டி அளித்த நிலையில், மறுநாளே வெட்டிக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.