Arts, culture, entertainment and media
இம்மார்ட்டல் - சினிமா விமர்சனம்!

பிரமாண்ட அபார்ட்மென்ட்டையும், அதன் வளாகத்தையும் வட்டமடிக்கும் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா, ஃபிளாஷ்பேக்கில் காடும் காடு சார்ந்த காட்சிகளுக்கும் கைகொடுக்கிறது.
காதல் ஆசையில் அமானுஷ்ய வலையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞனின் பாடுகளே `இம்மார்ட்டல்'.
சென்னையில் தன் மாமாவின் அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி.பிரகாஷ் குமார்), தனக்காக வாடகை வீடு தேடுவதில் மும்முரமாக இருக்கிறார். ஒருநாள், சிந்து (கயாடு லோஹர்) என்ற பெண், மகியைத் தொடர்புகொண்டு தனது அபார்ட்மென்ட்டில் ஓர் அறையை 5,000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவதாகத் தெரிவிக்கிறார். வாடகை குறைவு, பிரமாண்ட அபார்ட்மென்ட், அழைப்பது இளம்பெண் என்பதால் உடனே அங்கு குடியேறுகிறார் மகி. ஆனால், அங்கே அமானுஷ்ய நிகழ்வுகளும் ஆபத்துகளும் மகியைத் துரத்த, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அங்கிருந்து அவர் தப்பினாரா என்பதே இந்த ஹாரர் த்ரில்லரின் கதை.
பய உணர்வையும் பதற்றத்தையும் கச்சிதமாகக் கடத்தும் ஜி.வி.பிரகாஷ் குமார், ரொமான்ஸ், அப்பாவித்தனம் போன்ற பிற ஏரியாக்களில் தனது வழக்கமான நடிப்பையே வழங்கியிருக்கிறார். மர்மங்கள் நிறைந்த அமானுஷ்ய கதாபாத்திரம் என்றாலும், கசிந்துருகும் காதல் அத்தியாயங்களில் மட்டுமே ஸ்கோர் செய்கிறார் கயாடு லோஹர். அந்த பய உணர்வு சுத்தமாக மிஸ்ஸிங் மேம்! மாறன், ‘ஆதித்யா' கதிரின் கவுன்ட்டர்கள் ஆங்காங்கே கைகொடுக்க, டி.எம்.கார்த்தி, குமார் நடராஜன் ஆகியோர் மர்மங்களுக்கு இடையே வந்து போகின்றனர்.
பிரமாண்ட அபார்ட்மென்ட்டையும், அதன் வளாகத்தையும் வட்டமடிக்கும் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா, ஃபிளாஷ்பேக்கில் காடும் காடு சார்ந்த காட்சிகளுக்கும் கைகொடுக்கிறது. ஆனால், சண்டைக் காட்சிகளையும், நாயகன் தப்பிக்கும் படலத்தையும் இத்தனை பலவீனமாகக் காட்டியிருப்பதை, தொழில்நுட்பக்குழு கவனித்திருக்கலாம். சாம்.சி.எஸ்-ஸின் ஆங்கில வரிகள் கலந்த பின்னணி இசை, ஒரு சில இடங்களில் மட்டுமே காட்சிகளின் உணர்வைக் கூட்டுகின்றன.
உருவம் மாறுதல், ரத்தம் குடித்தல், சாகாவரம் எனப் பழக்கப்பட்ட வேம்பயர் கதைகளின் டெம்ப்ளேட்டில் படத்தைக் கட்டமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா. சட்டகத்தில் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுவது, உணவு டெலிவரி காட்சிகள், நாயகியின் அதீத சக்தியை விவரிக்கும் இடைவேளைக் காட்சி போன்றவை சுவாரஸ்ய ஐடியாக்கள்! ஆனால், ட்விஸ்ட் தெரிந்த பின்னரும் த்ரில் அத்தியாயத்துக்குள் நுழையாமல் டூயட் பாடிக்கொண்டேயிருக்கிறது திரைக்கதை.
அதேபோல முன்னர் காட்டப்படும் ஃபிளாஷ்பேக்கே போதுமானதாக இருக்க, மீண்டும் ஒரு கதாபாத்திரம் மூலம் அனிமேஷனில் இன்னொரு முன்கதை சொல்வதெல்லாம் அபார்ட்மென்ட் படிகளில் அநாவசியமாக ஏறி ஏறி இறங்கும் விளையாட்டே! மேலும், நாயகியால் நாயகனின் ஒவ்வொரு நகர்வையும் கட்டுப்படுத்த முடியுமென்றால், சில நேரங்களில் அவரின் தப்பிக்கும் முயற்சிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்ன லாஜிக்கோ?!
அமானுஷ்ய முடிச்சுகளை இறுக்கமாகப் போடாமல் விட்டதால், இந்த `இம்மார்ட்டல்' நம் மனதில் சாகாவரம் பெறவில்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
