Arts, culture, entertainment and media
காதலுக்கு பின்னால் பயங்கரமான விஷயம்? எந்தளவு ஈர்த்தது? - ‘இம்மார்ட்டல்’ விமர்சனம்

ஜிவி பிரகாஷ் சமீப காலங்களாக வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படங்களில் நடித்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்பொழுது ஒரு பேண்டஸி கலந்த காதல் படத்தில் நடித்திருக்கிறார். அது எந்த அளவு ரசிகர்களை ஈர்த்திருக்கிறது?
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஜிவி பிரகாஷ் வீடு தேடி வருகிறார். குறைந்த வாடகையில் பெரிய சொகுசு வீட்டில் தன்னுடன் தங்கி கொள்ளலாம் என கயாடு லோகர் அவரை அழைக்கிறார். சென்ற இடத்தில் அவருக்கும் ஜிவி பிரகாஷுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜிவி பிரகாஷை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுக்க ஜிவி பிரகாஷுக்கு நாயகி கயாடு லோகர் மீது சந்தேகம் வருகிறது. பின்பு அவர் பெண்ணே கிடையாது, பெண்ணாக உருமாறிய கொடிய மிருகம், தன்னை ஆட்கொள்ள திட்டம் தீட்டுகிறது என்பது ஜிவி பிரகாஷுக்கு தெரிய வருகிறது. அதிலிருந்து ஜிவி பிரகாஷ் தப்பித்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
காதல் கலந்த திரில்லர் படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா. ஜிவி பிரகாஷ் ஒரு வீட்டினுள் மாட்டிக் கொண்டதற்கு பிறகு அவர் படும் அல்லல்களை பயம் கலந்து நேர்த்தியாக காட்ட முயற்சித்திருக்கும் இயக்குநர் அதில் சற்று சரிவை சந்தித்திருக்கிறார். குறிப்பாக முதல் பாதி முழுவதும் கிளாமர் கலந்த காட்சிகளாகவே படம் நகர்கிறது, இரண்டாம் பாதியில் தான் கதைக்குள் செல்கிறது. அதன் பிறகு திரைப்படம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஆனால் அதை இன்னமும் வேகமாகவும் திரில்லிங் கலந்த பயத்துடன் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் பேசப்பட்டிருக்கும்.
ஜிவி பிரகாஷ் வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் திரில்லர் சம்பந்தப்பட்ட காட்சிகள் என தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி கயாடு லோகர் மிக அழகாக இருக்கிறார் கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார். மிருகம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட அழகாகவே இருக்கிறார். அழகில் தான் ஆபத்து இருக்கிறது என்பதை தன் நடிப்பின் மூலம் அழகாக உணர்த்திருக்கிறார். ஆதித்யா டிவி கதிர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிறிய பாத்திரமாக இருந்தாலும் மனதில் பதியும்படி கவனம் பெற்று இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் டி எம் கார்த்திக் மற்றும் லொள்ளு சபா மாறன் கொடுத்த வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
சாம் சி எஸ் இசையில் வழக்கம்போல் இரைச்சல் இசையை கொடுத்து காதுகளை தவிடு பொடி ஆக்கி இருக்கிறார். பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாகவும் பல இடங்களில் இரைச்சலாகவும் வழக்கம் போல் இருக்கிறது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.
ரத்த காட்டேரி மிருகம் சம்பந்தப்பட்ட ஒரு ஃபேண்டைசி கதையில் காதலை மையமாக வைத்து திரில்லரும் காதலும் கலந்த திரைப்படமாக இப்படத்தை கொடுத்திருக்கின்ற இயக்குநர், திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாக கூறியிருப்பது பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
இம்மார்டல் - மிருக காதல்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)