Religion
மதுரையில் கோலாகலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று (செப்.,17) காலை 7:40 மணி அளவில் இனிதாக நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர்.அனைத்து துறையினரும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்காத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மதுரைக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9 ஆயிரம் பேர் கோயில் மேல்தளத்தில் அனுமதிக்கப்பட்டனர். காலை 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.,8ம் தேதி நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் சீரமைப்பு பணிகள் நடந்ததால் 2021ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்தன. கடந்த செப்.,9ம் தேதி வீரவசந்தராயர் மண்டபம் திறப்பு விழா நடந்தது. இதைதொடர்ந்து செப்.,11 முதல் யாகசாலை பூஜை நடந்து வருகிறது. நேற்று கோயிலின் பரிவார மூர்த்திகள் எனப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக நேரம் இன்று அதிகாலை 12வது கால யாகசாலை பூஜைக்கு பின் புனித நீர் புறப்பாடு நடக்கிறது. காலை 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு அம்மன் சன்னதிக்கும், காலை 8:10 மணிக்கு சுவாமி சன்னதிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று கோயிலுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர்.
பொது தரிசனம் எப்போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க பகுதி பகுதியாக விடப்பட்டனர்.
இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 'பாஸ்' இல்லாத பக்தர்களுக்கு சித்திரை வீதிகளில் இன்று காலை 10:00 மணி வரை அனுமதி இல்லை. பத்து மணிக்கு மேல் கோயிலுக்குள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
கோயிலைச் சுற்றி சுழற்சி முறையில் குப்பையை அகற்ற 600 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 நிரந்தர கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 28 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 203 குடிநீர் தொட்டிகள் கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.
கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள் வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வரும் வகையில் 650 சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா, எல்லீஸ்நகர், டி.பி. ரோடு - ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவுவாயில் பகுதி, கோரிப்பாளையம், தெப்பக்குளம் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயிலில் 54 மருத்துவ மையங்கள், 27 இடங்களில் 54 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சிறப்பு முகாம்கள், கோயில் உட்புறத்தில் 6 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் சுற்றுப்புறத்தில் 5 மருத்துவ மையங்கள், 4 மையங்களில் உயிர் காக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 8 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 12 ஆம்புலன்ஸ்கள்
பத்து '108' ஆம்புலன்ஸ்கள், 2 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். மதுரை அரசு மருத்துவமனை சார்பில் செப்.,16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
குழந்தைகளுக்கு அடையாள 'டேக்' கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று முதல் செப்., 20 வரை பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் உட்பட 51 இடங்களில் மெகா திரை மூலம் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் புதுமண்டப கட்டுப்பாட்டு அறையில் இருந்து 448 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக புனிதநீரை கோயில் வளாகம், ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் 'ஸ்பிரிங்க்ளர்' மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க அவர்களின் கைகளில் அடையாள 'டேக்' அலைபேசி எண்ணுடன் பொருத்தப்பட உள்ளது.
கும்பாபிஷே கத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு வரை கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கும்பாபிஷேகத்தை காண மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரெங்கும் இரவிலும் வண்ணமயமாய் அலங்கார விளக்குகள் ஒளிவீசுகின்றன. எங்கிருந்தும் கோயில் கோபுரங்களை காணும் வகையில் லேசர் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டு விழாவாக எண்ணி லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே மதுரைக்கு வரத்துவங்கினர்