Crime, law and justice
கேரளாவில் லாரி பின்புறம் மோதி நொறுங்கிய கார்

திண்டுக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியது. இவ்விபத்தில் காரில் பயணித்த திண்டுக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 11:42 மணிக்கு குருவாயூரில் இருந்து கொடுங்கல்லுார் நோக்கிச்சென்ற தமிழகப் பதிவு எண்கொண்ட கார் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் மோதியது.
மீட்பு பணியில் சிரமம் இவ்விபத்தில் காரில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். லாரிக்கு அடியில் சிக்கி கார் சுக்குநுாறாக நசுங்கி கிடந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. கனரக மீட்பு வாகனங்கள், தீயணைப்பு மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு லாரி சிறிது துாரம் முன்னோக்கி நகர்த்தப்பட்டது.
முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த இருவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து காரின் கூரையை வெட்டி எடுத்து விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்ற 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர்கள் விசாரணையில் உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரியில் இறுதியாண்டு சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மதுரை மாவட்டம் பழைய விளாங்குடியை சேர்ந்த ஜோசுவா ஹில்சன் 20, அய்யன்கோட்டை அழகுமுத்துக்கோன் நகர் முரளிகிருஷ்ணன் 20, விரகனுார் பிரசன்னா 20, இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்திலதொப்பம்பட்டி ஜீவா 20, நல்லாம்பட்டி சூர்யா 20, மதுரை மாவட்டம் மேலுார் நவினிப்பட்டி சந்தோஷ் 20,முன்னாள் மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பையை சேர்ந்த யுவசஞ்ஜித் 20, சேலம் மாவட்டம் புதுநல்லாகவுண்டம்பட்டி விஷ்வா 20, என தெரிந்தது.
கார் ஓட்டிச்சென்றவர் துாங்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து விடப்பட்டிருந்த நிலையில் அங்கு போதுமான வெளிச்சம் இல்லை. திருப்பம் உள்ள அந்த இடத்தில் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டது எதற்காக, தப்பிச்சென்ற டிரைவர் எங்கே என்று கைப்பமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிதாக வாங்கிய கார் பலியான ஜீவாவின் உறவினர் கூறுகையில் ''சந்தோஷ் சமீபத்தில் புதிய கார் வாங்கினார். அதனை கொண்டாட ஒருநாள்பயணமாக கொச்சிக்கு செல்ல நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர். புதிய காருக்கு பதிவெண் வாங்காததால் அந்த காரை எடுத்துச் செல்ல முடியாதென, அவர்களுக்கு பழக்கமான மற்றொரு நண்பரின் புதிய காரை எடுத்துச்சென்றனர்' என்றார்.
செல்பி போட்டோ, வீடியோ வைரல் மாணவர்கள் சுற்றுலா சென்ற தகவல் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. அனைவரும் மதுரையில் கூடி அங்கிருந்து கேரளாவிற்கு ஒரே காரில் கிளம்பி உள்ளனர். முன்னதாக அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யும் பணி திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. பின்னர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கலெக்டர் ஷிகா, எஸ்.பி., முகமது நடிமுதின், உயரதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் திண்டுக்கல்மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
---- மாணவர்களின் குடும்ப பின்னணி ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை அண்ணா நகரை சேர்ந்த பைனான்சியர் கார்த்திகேயன், தனலட்சுமி தம்பதியின் மூத்த மகன் யுவசஞ்சித் 20. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் இறுதியாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். கல்லுாரி ஒழுங்கு நடவடிக்கையால் 2026 ஆக.,13ல் அவருக்கு டி.சி., வழங்கப்பட்டது. இந்நிலையில் நண்பர்களுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் பலியானார்.
நத்தம் அருகே வத்தலதொப்பம்பட்டி அருகே பாலகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி நடராஜன்- மேகால் தம்பதியின் மகன் ஜீவா 20. இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். கோகுலாஷ்டமி உள்ளிட்ட மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் கேரளவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை பெறுவதற்காக குடும்பத் தினர் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் அய்யப்பன்- மீனாகுமாரி தம்பதி யின் மூத்த மகன் சூர்யா 20. பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். சிறிய கோயிலில் பூஜாரியாகவும் இருந்தார். சமீபத்தில் கல்லுாரியில் நடந்த வளாகத்தேர்வில் தேர்வாகி இருந்த இவர் மூன்று மாதங்களில் பணியில் சேர இருந்த நிலையில் பலியானார்.
எம்.பி., நடவடிக்கை திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மாணவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்ததும் கேரள மாநிலம் ஆலத்துார் எம்.பி., ராதாகிருஷ்ணனிடம் பேசி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கலெக்டர் துர்கா உத்தரவில் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஆர்.டி.ஓ., தாசில்தார் அனுப்பப்பட்டு அரசுத் தரப்பில் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை அண்ணா நகருக்கு மாணவர் யுவசஞ்சித் உடல் நேற்று மாலை 5:00 மணிக்கு கொண்டு வரப்பட்டு தகனம் நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம் மாணவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.