பட்டியல் சமூகத்தினர் எடுத்துவந்த விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு-பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் ஊரின் பிரதான சாலையில் பட்டியல் சமூக மக்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதான கடலூர் சாலையில் சிலையை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிக்குப்பம் கிராமத்தில் பிரதான சாலை வழியாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.13-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் கடலூரில் இருந்து விநாயகர் சிலை வாங்கி வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, சிலையை கிராமத்தின் பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிலையுடன் வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், வேறு வழியாக சிலையை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள், “காலம் மாறியும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்படுவது நியாயமல்ல” எனக் கூறி, மீண்டும் விநாயகர் சிலையை கிராமத்தின் பிரதான சாலை முகப்பில் கொண்டு வந்து வைத்து, வழக்கம்போல் அந்தச் சாலை வழியாகவே சிலையை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்த மிகவும் பிற்பட்ட சமூக தரப்பினர், “விநாயகர் சிலை ஊர்வலமாக இந்தச் சாலை வழியாகச் செல்லும்போது ஆட்டம், பாட்டம் மற்றும் அதிக சத்தம் ஏற்படுவதால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழியாக சிலையை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறுகிறோம்” என தெரிவித்தனர்.
இதற்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில், “எங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காவல் நிலையத்தில் புகார் அளித்து பேசி தீர்த்துக் கொள்கிறோம். அந்த தரப்பினரின் சாமி ஊர்வலங்கள் எங்கள் தெரு வழியாக வரும்போது ஆட்டம், பாட்டத்துடன் சென்றாலும் சாதிய சிந்தனையுடன் உள்ள பாடல்களை போட்டு ஆடுவார்கள் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அவர்களது இறுதி ஊர்வலமும் எங்கள் தெரு வழியாகத்தான் செல்கிறது. அப்போது பிணத்தின் மீது உள்ள மாலைகளை எடுத்து எங்கள் மீது போடுவார்கள் அதற்கும் நாங்கள் பொறுத்து தான் செல்கிறோம்.
ஆனால் தற்போது எங்கள் சாமி சிலையை இந்தத் தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்? ஊர்வலத்தின்போது விதிமீறல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குறிப்பிட்ட பிரதான தெரு வழியாகவே சிலையை எடுத்துச் செல்லக் கூடாது என தடை விதிப்பதை ஏற்க முடியாது. எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வழியாகத்தான் விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம்” என தெரிவித்தனர்.
மேலும் விநாயகர் சிலையை எடுத்து செல்லும்போது எங்களை தாக்குவதற்காக கே.பஞ்சங்குப்பம், சி.பஞ்சங்குப்பம், கரிகுப்பம், தோப்பிருப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மிகவும் பிற்பட்ட சமூகத்தினரை ஒன்றாக கூட்டி வைத்துள்ளனர் என்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரிடமும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)