Economy, business and finance
“எங்கேயும் மின்சார தட்டுப்பாடு இல்லை, எதுவும் பிரச்சனை இல்லை” - அமைச்சர் நிர்மல்குமார்!

மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களில் அண்மைக் காலமாக ஆங்காங்கே மின்வெட்டு மற்றும் அடிக்கடி வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. அதாவது பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் 1 மணி நேரம் 3 மணி நேரம் வரை அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், தவெக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் குறைவாக உள்ளது. அதை சரி செய்ய ஆய்வு நடத்தினேன். இன்றைக்கும் மார்க்கெட்டில் இருந்து கூடுதலாக 1,500 மெகா வாட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தால் குறைந்த 1500 மெகா வாட்டையும் சீர் செய்வதற்காக, பொது தொகுப்பில் இருந்து 1,500 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் வாங்குறதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்திருக்கிறோம். எனவே, தட்டுப்பாடு இல்லாமல் சீர் செய்யும் பணிகளை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 2000 மெகாவாட்டும், இன்று காலையில் இருந்து ஒரு 1100 மெகவாட்டும் குறைந்திருக்கிறது. அதையும் சீர் செய்யப்பட்டிருக்கிறது. மின்சார விநியோகம் கடந்த 3 நாட்களாக முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. எங்கேயும் மின்சார தட்டுப்பாடு இல்லை, எதுவும் பிரச்சனை இல்லை. ஒரு சில இடத்தில் பவர் ஃபெயிலியர்ஸ் ஆவதால், மின் தடை ஏற்படுகிறது. இதை தவிர்த்து மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. ஏதாவது ஒரு இடத்தில் பிரேக் பெயிலியர்ஸ் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி எல்லாமே சீர் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் சீராக சென்று கொண்டிருக்கிறது. கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20க்கு வாங்குகிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)