Economy, business and finance
"கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல்" - மின்சார வாரியம் தகவல்!

மின் விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின் தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின் தேவையும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழல் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள மின்வாரியம், மின் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், மின் விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின் தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு 24 மணிநேர சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை முதல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கரூர், விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு என்றும் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதனால், அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மின் வெட்டு தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் வோல்டேஜ் பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' தவெக அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
