Politics
48 இடங்களில் கொள்முதல் நிலையங்கள்: முறைகேடில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

செங்கல்பட்டு:சொர்ணவாரி பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய, செங்கல்பட்டு மாவட்டத்தில், தற்கலிகமாக 48 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்டத்தில், 1.86 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில், 34 ஏக்கருக்கு மேல், நெற்பயிர் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.
இதனால், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2026-27 பருவத்தில், நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், சித்தாமூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 48 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் வீரப்பன், கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். அதன்பின், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெ ளியிட்ட அறிக்கை:
சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,750 ரூபாயும், பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,600 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள, நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தவித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில், பணிபுரிய வேண்டும்.
குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்மந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் அலுவலர்கள் தினமும் நேரடி நெல் கொள்முதல் நிலைய பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்து, குறைபாடுகளை உடனுக்குடன் களைய வே ண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.