Lifestyle and human interest
தினமலர் பவள விழா கண்காட்சி: முக்கால் நுாற்றாண்டு வரலாற்று சுவடுகள்!

சென்னை: 'தினமலர்' நாளிதழின் 75ம் ஆண்டு பவள விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், 'தினமலர்' நாளிதழ் தொடக்கம் முதல், இன்று வரை கடந்து வந்த பாதை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சி, தமிழ் இதழியல் வரலாற்றின் ஒரு நெடிய பயணத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. கடந்த காலத்தின் தடம் மாறாத வரலாற்றுச் சுவடுகளையும், தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களையும் தாங்கி நின்ற, 111 முக்கிய இதழ் களின் முதல் பக்க தலைப்பு செய்தி களும், தலையங்கங்களும் வாசகர்களை பெருமளவில் கவர்ந்தன.
கடந்த 1951 செப்டம்பர் 6ல், டி.வி.ராமசுப்பையரால் தொடங்கப்பட்ட 'தினமலர்' நாளிதழின் முதல் இதழில், 'ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா' சட்டசபையில் நிறைவேறிய செய்தி இடம் பெற்றது. தேசிகவிநாயகம் பிள்ளையின் வாழ்த்தோடு தொடங்கிய இப்பயணம், 1956ல் புதியதொரு திருப்பத்தைக் கண்டது.
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க, 'தினமலர்' நடத்திய போராட்டத்தின் பயனாக, 1956 நவம்பர் 1ல் வெளியான இதழ், வரலாற்றுப் பதிவானது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், யோகி சுத்தானந்த பாரதி ஆகியோரின் வாழ்த்து பாடல்கள், நாளிதழில் இடம்பெற்றன.
தமிழகத்தின் ஆட்சி மாற்றங்களையும், தேசத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்ததில், 'தினமலர்' நாளிதழின் பங்கு மகத்தானது. 1960களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், அண்ணாதுரை கைது, பிரதமர் நேருவின் மறைவு, லால் பகதுார் சாஸ்திரியின் குறுகிய கால ஆட்சி மற்றும் இந்திராவின் எழுச்சி ஆகியவை முதன்மை செய்திகளாக மிளிர்ந்தன.
அண்ணாதுரை மறைவும் எம்.ஜி.ஆர்., நடவடிக்கையும்
கடந்த 1969ல் அண்ணாதுரையின் மறைவும், கருணாநிதியின் பதவியேற்பும், 1972ல் தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டதும் அரசியல் சூழலை சூடாக்கின.
கடந்த 1975 நெருக்கடி நிலை, காமராஜரின் மறைவு, 1977ல் எம்.ஜி.ஆரின் அசுர வெற்றி ஆகியவை, 'தினமலர்' நாளிதழின் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றுள்ளன.
'தினமலர்' மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின், திருநெல்வேலி மற்றும் திருச்சியை தொடர்ந்து, 1979ல் சென்னை பதிப்பும், 1980ல் மதுரை பதிப்பும் துவங்கப்பட்டது. தொடர்ந்து, 1992ல் கோவை பதிப்பும் தொடங்கப்பட்டு, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் 'தினமலர்' நாளிதழ் பரவியது.
கடந்த 1984ல் பிரதமர் இந்திரா படுகொலை, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் மறைவு, 1987ல் எம்.ஜி.ஆர் மறைவு போன்ற துயரச் செய்திகளையும்; 1998 அணுகுண்டு சோதனை, 1999 கார்கில் வெற்றி, 2002ல் அப்துல் கலாம் ஜனாதிபதியான பெருமிதம், 2023ல் 'சந்திரயான் - 3' விக்ரம் லேண்டரின் நிலவுத் தடம் போன்ற தேசத்தின் பெருமைமிகு தருணங்களையும், 'தினமலர்' நாளிதழ் கம்பீரமாக பதிவு செய்துள்ளது.
கடந்த 2004 சுனாமி பேரழிவு, 2016ல் ஜெயலலிதா மறைவு, 2018ல் கருணாநிதி மறைவு என தமிழகம் அடுத்தடுத்து சோகங்களை கண்டது. இதற்கிடையில், 2014ல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.
அவரது வருகை, ஜி.எஸ்.டி., அமல், 2020 கொரோனா ஊரடங்கு, 2024 அயோத்தி ராமர் பிராணப் பிரதிஷ்டை போன்ற மாற்றங்களும், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
கண்காட்சியின் நிறைவாக, 2026 மே மாதத்தில், தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாக, 60 ஆண்டு கால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய் தலைமையிலான, 'தமிழக வெற்றிக் கழகம்' வெற்றி பெற்று ஆட்சியமைத்த வரலாற்றுச் செய்தியும் இடம்பெற்றிருந்தது.
முக்கால் நுாற்றாண்டு கால வரலாற்றை வெறும் செய்திகளாக மட்டுமின்றி, காலத்தின் சாட்சியாக பதிவு செய்துள்ள 'தினமலர்' நாளிதழின் இந்த பவள விழா கண்காட்சி, தமிழ் அச்சு ஊடகத் துறையில் ஒரு பொன்னான வரலாற்றுப் பதிவாகும்
நீண்ட நாளாக 'தினமலர்' வாசகராக உள்ளேன். இக்கண்காட்சி அருமையாக உள்ளது. அரங்கத்தில் உள்ள கண்காட்சியை பார்க்கும்போது, அந்த காலத்துக்கே சென்றது போல் உள்ளது. ஆரம்பகால செய்திகளை நாங்கள் பார்த்தது இல்லை. இப்போது காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு, 'தினமலர்' நாளிதழ் பாலமாக உள்ளதை இதன் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்ற தலைப்பு செய்தி, என்னை மிகவும் ஈர்த்தது.
கடந்த 1995ல் இருந்து 'தினமலர்' வாசகராக உள்ளேன். இங்கு வைத்துள்ள ஒவ்வொரு தலைப்பு செய்திகளும் கவரும் வகையில் உள்ளன. நான் கொடுத்த கட்டுரை, தினமலரில் வெளியாகி உள்ளது. 'வாரமலர்' தொடர்ந்து படித்து வருகிறேன்.
'அலை ஓசை' எனும் பத்திரிகையில், உதவி ஆசிரியராக பணியாற்றினேன். பொதுவாக ஒரு பத்திரிகையை, 10 ஆண்டுகள் நடத்துவதே கடினம். 75 ஆண்டுகளாக 'தினமலர்' பத்திரிகை வெளிவந்து கொண்டிருப்பது பெரிய சகாப்தம். இக்கண்காட்சியை பார்க்கும் போது, பழைய நினைவுகள் வருகின்றன. முக்கிய செய்திகள் இங்கு வைக்கப்பட்டு இருப்பது சிறப்பாக உள்ளது.