Economy, business and finance
ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது சிரிக்கத்தக்கது - கடும் எதிர்ப்பை தெரிவித்த டிரம்ப்
சார்லட்ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றாக இணைவதற்கான முடிவில் கனடா உள்ளது. அதற்கான வேல

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றாக இணைவதற்கான முடிவில் கனடா உள்ளது. அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறும்போது, கனடா நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றாக இணைக்கும் முடிவு பகைமையை வளர்க்கும் செயலாகும்.
இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட கூடும் என அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கனடாவை உறுப்பினராக சேர்த்து கொள்ளும் நோக்கத்துடன் ஐரோப்பிய தலைவர்கள் உள்ளனர்.
அது நல்ல நோக்கத்தில் இருக்குமென்றால் நலம். அப்படி இல்லாமல் கெட்ட உள்நோக்கத்துடன் இருக்கும் என்றால், ஐரோப்பிய நாடுகள் மீது நாங்கள் பெரிய அளவில் வரிகளை விதிப்போம் என கூறினார். ஐரோப்பாவின் சில பகுதிகளில் வர்த்தகங்களை நிறுத்தி கொள்வோம் என்றும் மிரட்டலாக கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது என்பது சிரிக்கத்தக்கது என கூறிய டிரம்ப், அமெரிக்காவின் அண்டை நாடு ஒரு பயங்கர வர்த்தக பங்குதாரராக உள்ளது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ஐரோப்பிய நாடுகளை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் கார்கள் உள்ளன. கட்டிடங்கள் எழுப்ப தேவையான மரக்கட்டைகள் உள்ளன. உணவு உள்ளது. எல்லாமும் எங்களிடம் உள்ளது என கூறினார்.
கடந்த காலத்தில் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவை வெளியிட்ட டிரம்ப் அதுதொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறார். அமெரிக்காவின் 51-வது மாகாணம் என்ற அளவில் கனடாவை உருவாக்குவோம் என்றும் அதற்கு உடன்படாவிட்டால் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறினார்.
இதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனங்களை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக கனடா மீது கடுமையான வரிகளை அமெரிக்க அரசு விதித்தது. இதனால், வடஅமெரிக்காவில் அமைந்த இந்த இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த சூழலில், அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 70 சதவீத ஏற்றுமதியை செய்து வரும் கனடா, அமெரிக்காவை சார்ந்திராமல் செயல்பட முடிவு செய்தது. இதனை தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முடிவை கனடா பிரதமர் வெளியிட்டார்.