Economy, business and finance
வர்த்தக போரில் தன்னிறைவு பெற்ற பொருளாதார நாடாக உருவெடுப்போம்; கனடா பிரதமர் உறுதி

ஒட்டாவா: அமெரிக்காவுடனான தனது வர்த்தக போரில் இருந்து ஒரு வலிமையான, தன்னிறைவு பெற்ற பொருளாதார நாடாக உருவெடுப்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரன்டோவில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் மார்க் கார்னி பேசியதாவது: அமெரிக்காவுடன் அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்யப் போவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தை தன்னிறைவு பெற்ற சுயசார்பு கொண்டதாக மாற்ற உள்ளோம்.
அமெரிக்காவுடன் நாங்கள் எப்போதும் அயலவர்களாக இருப்போம்; ஆனால் உண்மையான கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் பாரம்பரியத்தையும் இறையாண்மையையும் மதிக்க வேண்டும்.
கனடாவின் சொந்த வளம், சக்தி மற்றும் சட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் சொந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மைய உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்; நாட்டின் முக்கிய விமான நிலையங்களுக்கு நீண்டகாலக் சலுகைகளை வழங்குவதன் மூலம் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும்.
கனடா தன்னிறைவு பெற்ற பொருளாதார சக்தியாக உருவெடுக்க விரும்புகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக போரில் சரியான சூழ்நிலைகளுக்காக காத்திருந்து கனடா மேலும் வலுப்பெற முடியும். இவ்வாறு மார்க் கார்னி பேசினார்.