Politics
மிஸ்டர் கழுகு: “ஆறு பேரை தோற்கடிப்போம்...” - எடப்பாடி பழனிசாமி சபதம்!

ஒருவேளை, தி.மு.க கூட்டணிக்கு வர பா.ம.க சம்மதித்துவிட்டால், மதுராந்தகம் தொகுதி பா.ம.க-வுக்குப் போகலாம்.
“எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து கேள்வி கேட்க வாய்ப்பளிக்கவே இல்லை. வெறும் பதிலுரை மட்டும்தான் என்றால், இதுதான் சட்டமன்ற நடைமுறையா?” என யாருக்கோ வாய்ஸ் நோட் அனுப்பியபடியே அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, கறுப்பு கவுனி அல்வாவும், முக்கனிப் பாயசமும் கொடுத்தோம். சுவைத்துவிட்டு, செய்திகளுக்குள் தாவினார்.
“ `மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தன் ஆளுமையை நிரூபிக்கவேண்டிய நெருக்கடி எந்த அளவுக்கு த.வெ.க-வுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு சிட்டிங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றவேண்டிய நெருக்கடி அ.தி.மு.க-வுக்கும் இருக்கிறது. செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘நம்ம கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து துரோகம் செஞ்சுட்டாங்க. அவங்களை வர்ற இடைத்தேர்தல்ல தோற்கடிக்கணும். விஜய் அலை வீசினபோதே, அந்த ஆறு தொகுதிகளையும் நாமதான் ஜெயிச்சோம். மறுபடியும் நாமதான் ஜெயிப்போம். இதுக்காக சபதம் எடுத்து, நம்பிக்கையோட வேலை செய்வோம்...’ என்று நிர்வாகிகளுக்கு அழுத்தமாகக் கருத்து பகிர்ந்திருக்கிறார் எடப்பாடி.”
“ஓஹோ...”
“அந்த ஆறு தொகுதிகளிலும் க ளநிலவரம் தொடர்பாக ஒரு சர்வேயை எடுத்திருக்கிறார் எடப்பாடி. அதில், ‘தாராபுரம், மதுராந்தகத்தில் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பிருக்கிறது. பா.ம.க கூட்டணியில் தொடர்ந்தால் மட்டுமே மதுராந்தகத்தில் வெற்றி சாத்தியம்’ என்று ரிப்போர்ட் அளிக்கப்பட்டிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து, கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி என சீனியர்களை அழைத்து ஆலோசனை செய்தவர், கூடுதல் கவனம் செலுத்த மாவட்டச் செயலாளர்களுக்கும், தன் மகன் மிதுனுக்கும் உத்தரவிட்டிருக்கிறாராம்.”
“தி.மு.க-வின் திட்டம் என்ன?”
“இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டுமே தனித்தொகுதிகள் என்பதால், ‘வி.சி.க-விலிருந்து தி.மு.க-வில் இணைந்த செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை மதுராந்தகத்தில் நிறுத்தலாம்’ என்ற ஆலோசனை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை, தி.மு.க கூட்டணிக்கு வர பா.ம.க சம்மதித்துவிட்டால், மதுராந்தகம் தொகுதி பா.ம.க-வுக்குப் போகலாம். அதேநேரம், ‘இடைத்தேர்தலைப் புறக்கணித்து, அ.தி.மு.க-வை மட்டும் போட்டியிடவிட்டு த.வெ.க-வைத் தோற்கடிக்கலாமா?’ என்ற பேச்சும் ஒரு பக்கம் ஓடுகிறதாம்.”
“ம்ம்... லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியிருக்கிறாரே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு?”
“நேருவுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியும் எதுவும் சிக்கவில்லையாம். இந்த ரெய்டு குறித்து மூன்று நாள்களுக்கு முன்பே அலர்ட் கொடுத்திருக்கிறார்கள் சில காவல்துறை அதிகாரிகள். இதனால், பெரிய அளவில் எந்த ஆவணத்தையும் எடுக்க முடியவில்லையாம். இந்த நிலையில், ‘பார்ட்டி ஃபண்ட்’ விவகாரத்தை வைத்து வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்...”
“வழக்கமாக ரெய்டுகளிலும் வழக்குகளிலும் சிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இப்போது உட்கட்சி சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறாரே!”
“தி.மு.க-வில், மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க கோவை மாவட்டத்துக்கு முன்னாள் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். செப்டம்பர் 6-ம் தேதி நடந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது, ‘நாங்கள் சொல்வதுபடிதான் கட்சியைப் பிரிக்க வேண்டும், நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்’ என்று செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர், இருவரிடமும் அழுத்தமாகச் சொன்னாராம். ‘மீண்டும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கே கட்சிப் பதவிகளை வழங்குவது அநியாயம்’ என, கொங்கு தி.மு.க-வினர் பொங்குகிறார்கள்.”
“அது சரி... புதுக்கோட்டை தி.மு.க-விலும் வார்த்தைப் போர் முற்றியிருக்கிறதே?”
“ஆமாம். புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ரகுபதிக்கும், அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகத்துக்கும் இடையே மோதல் வெடித்து பொதுவெளிக்கு வந்துவிட்டது. மேடையிலேயே இரு தரப்பும் வார்த்தைகளால் வாளெடுத்து வீசியிருக்கிறார்கள். இது போன்ற பிரச்னைகள் தன் காதுக்கு வரும்போது, ‘சண்டை வந்தால் வரட்டும்... பார்த்துக்கொள்ளலாம்’ என்று அமைதியாக இருக்கிறாராம் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதைத்தான் இரு இதழ்களுக்கு முன்பாக நீரே கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தீரே... அதில் சொல்லப்பட்டதுபோலவேதான் நடக்கிறது” என்ற கழுகாருக்கு, பனீர் 65 கொடுத்தோம். சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்.
“செப்டம்பர் 9-ம் தேதி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது த.வெ.க. முறைப்படி கூட்டணி அமைப்பது குறித்துத்தான் பேசவிருக்கிறார்கள். கடந்த முறை மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில், ‘நம்முடைய புதிய கூட்டணிக்குப் பெயர் சூட்ட வேண்டும். தலைவர், ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்’ என்று பேசப்பட்டபோது, ‘இப்போதைக்கு வேண்டாம். அடுத்த கூட்டத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டார் வி.சி.க தலைவர் திருமாவளவன். இப்போது அதற்கான காலம் கனிந்திருக்கிறதாம்.”
“அது சரி...”
“முதல்வர் விஜய்யைத் தலைவராகக்கொண்டு உருவாகும் அந்தக் கூட்டணிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அல்லது திருமாவளவன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படலாம். ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., வி.சி.க கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம்பெறவிருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கிடைக்காததில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அப்செட்டாம்.”
“ஓஹோ... கம்யூனிஸ்ட்டுகள் யார் பக்கம்?”
“அவர்கள் ‘இடதுசாரிகள் முன்னணி’ என்கிற பெயரில் புதிதாக ஒரு அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அக்டோபர் 15-ம் தேதி ‘தமிழ்நாடு இனி இடது பக்கம்’ என்ற தலைப்பில் திருச்சியில் மாபெரும் பேரணிக்கு ஆயத்தமாகிறார்கள். இடைத்தேர்தலுக்குள் கம்யூனிஸ்ட்டுகளையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டீர்கள். துணை சபாநாயகர் பதவியைத் தருகிறோம். அதை ஏற்றுக்கொண்டு நீங்களும் எங்களுடன் வர வேண்டும்’ என்று ஆஃபர் கொடுத்திருக்கிறது த.வெ.க தலைமை. முதல்வர் தலைமையில் உருவாகும் இந்தக் கூட்டணிக்கு, மதச்சார்பற்ற, சமூக நீதி வாசகங்கள் உள்ளடக்கிய ஒரு புதிய பெயர் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.”
“சரி... புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மாற்று இடம் தேர்வாகிவிட்டதா?”
“கும்மிடிப்பூண்டிக்கு அருகே மாநெல்லூர் கிராமத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். ஆனால், 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருப்பதி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் முயற்சியில் ஆந்திர அரசு இருப்பதால், மாநெல்லூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுப்பது சிரமம் என்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் அமைக்கலாம் என்றால், பெரும் பகுதி விவசாய நிலங்களாக இருப்பதுடன், ஒதியூர் பறவைகள் சரணாலயமும் இருப்பதால் அங்கேயும் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறதாம்.”
“ம்ம்...”
“தலைநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழகமெங்கும் இருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்தினர் நடத்தும் அந்தக் கல்லூரியின் சொத்துகளை, நிர்வாகத்தில் இருப்பவர்களே கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டி விற்றுவிட்டார் களாம். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், கல்லூரி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1,000 கோடி ரூபாய் சொத்துகள் முறைகேடாக கைமாற்றப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. ரோமிலிருந்து வந்தவர்கள் அது குறித்து விசாரித்து மேலிடத்துக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், ‘கடந்த ஆட்சியில் கோலோச்சிய ‘தூங்கா நகர’ மாண்புமிகுவின் கைங்கர்யம் ஏதும் இருக்கிறதா?’ என்று தோண்டத் தொடங்கியிருக்கிறது த.வெ.க அரசு.”
“ஓஹோ... ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிடம் பம்முகிறதாமே த.வெ.க அரசு?”
“அது என்னவோ உண்மைதான். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, ஒற்றை எழுத்து நிறுவனத்தின் ஆதிக்கம் இப்போதும் தொடர்கிறதாம். அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தால், வழக்கு பதிவுசெய்ய மறுக்கிறதாம் காவல்துறை. பொள்ளாச்சி, சேலம், திருச்சி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இதுபோல நடந்திருக்கிறது. அங்கிருக்கும் காவல்துறை உயரதிகாரிகள், ‘மேலிடத்துல இருந்து பர்மிஷன் வராம நாங்க வழக்கு பதிவுசெய்ய முடியாதுங்க’ என்று கைவிரிக்கிறார்களாம். ‘அந்த ஒற்றை எழுத்து நிறுவனத்துக்கும், அண்ணாசாலை கட்சியின் மேலிடத்து மாப்பிள்ளைக்கும் இருந்த தொடர்பு ஊரறிந்த ரகசியம். ‘மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்’ என்று சூளுரைக்கிறார் முதல்வர். அவரின் ஆட்சியில், அப்படித் தொட்டவர்களை பாதுகாப்பது, முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் ஆந்திரத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர் என்பதால், நாங்கள் எப்படி நடவடிக்கை எடுப்பது?’ என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்...”
“ம்... வேறு என்ன விசேஷச் செய்திகள்?”
“முதன்மையானவருக்கு நெருக்கமான துறைமுக மாவட்ட அமைச்சர், கடந்த மூன்று மாதங்களாக ஸ்ட்ரிக்ட்டாகத்தான் இருந்திருக்கிறார். தொகுதியின் முக்கியப்புள்ளிகள், சங்கப் பிரதிநிதிகளைச் சந்திப்பதையே மறுத்து வந்த நிலையில், தற்போது உறவுப்புள்ளி ஒருவரைப் பிரத்யேகமாக நியமித்திருக்கிறாராம். யார், எந்த விஷயத்துக்காக அணுகினாலும், ‘மச்சான்கிட்ட பேசிக்கோங்க’ என்று சொல்லிவிடுகிறாராம் அமைச்சர்.”
“மச்சான் அரசியல் ஆரம்பித்துவிட்டதா...”
“மச்சானும் சும்மா இல்லை. துறைமுக மாநகராட்சியின் டெண்டர் விவகாரங்கள், வசூல் ரூட்டுகள் எனச் சகலத்தையும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘யாரிடமும் டிமாண்ட் செய்ய வேண்டாம். அதேநேரம், அன்பளிப்புகளை மறுக்கவும் வேண்டாம்’ என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். சமீபத்தில் மாவட்டப் பொறுப்பும் தரப்பட்டிருப்பதால், அமைச்சருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.”
“மாநகராட்சி என்றதும் நினைவுக்கு வருகிறது. எப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவிருக்கிறார்கள்?”
“அப்படியொரு திட்டமே த.வெ.க-விடம் இல்லையாம். உள்ளாட்சிப் பொறுப்புகளைக் கலைத்துவிட்டு, அதிகாரிகளை வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்யும் முடிவில் இருக்கிறாராம் முதல்வர். இடைத்தேர்தலில் மக்களின் பல்ஸைப் பார்த்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது முடிவாகும் என்கிறார்கள். அதற்கு முன்னதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியை அந்தப் பொறுப்பிலிருந்து அகற்ற ஆயத்தமாகிறார்கள்.”
“ம்ம்ம்...”
“தென்மாவட்டத்தில் த.வெ.க கொஞ்சம் வீக்காக இருப்பதை உணர்ந்த கட்சித் தலைமை, நாடார் சமூக வாக்குகளைக் குறிவைத்து, ‘கள் இறக்கத் தடையில்லை என்று அறிவித்துவிடலாமா?’ என ஆலோசிக்கிறதாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான செப்டம்பர் 11 அன்று, ‘வன்னி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்’ என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருப்பதை அடுத்து, சமூக வலைதளங்களில் இரு தரப்பினரும் மாறி மாறி வார்த்தைப் போர் நடத்திவருகிறார்கள். இதனால், செப்டம்பர் 11 அன்று நடைபெறும் அஞ்சலி நிகழ்வு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிய வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள் காவல்துறையினர்” என்றபடி சிறகுகளை விரித்துவிட்டு,
“இன்னொரு செய்தியைக் கேளும். மதுரையில், கூடல்நகரில் 11-ம் வகுப்பு படித்துவரும் பட்டியலின மாணவர் தமிழ்ச்செல்வன், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக மாணவியுடன் நட்பாகப் பழகிவந்தது பிரச்னையான நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அந்த மாணவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றபடி பறந்தார்.
