விநாயகர் சிலையைக் கரைக்க நீரில் இறங்கிய மாணவர்கள்; கரை சேராத துயரம்

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம் படஞ்சேரு மண்டலம் பெட்டகஞ்சர்லா என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற போது ஏற்பட்ட துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெட்டகஞ்சர்லா கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அந்த விநாயகர் சிலையைக் கரைக்க அப்பகுதியில் இருந்த 'நேரேடு செருவு' என்ற குளத்திற்குச் சிலையை எடுத்துச் சென்றனர். அப்போது, சிலையைக் கரைக்க அந்த குளத்தில் இறங்கிய 6 மாணவர்கள் நீரில் மூழ்கினர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிர் இழந்ததாகத் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தூர்வாரப்பட்டதால் அந்த குளம் அதிக குழியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதெரியாத மாணவர்கள், அதில் இறங்கியதால் நீரில் மூழ்கி இறந்தனர். காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ரேவந்த், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குச் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விநாயகர் சிலை கரைப்பின் போது போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)