Politics
திருச்சியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உறவினா் வீடுகளில் சோதனை: சென்னையில் நாளை நேரில் ஆஜராக உத்தரவு
அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடைபெறுவது பற்றி...
அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை! - ANI
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவரது உறவினா் மற்றும் உதவியாளா் வீடு என திருச்சியில் 3 இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
தனியாா் பள்ளி நிா்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயா்வு மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்த புகாரில், சென்னை பெருநகர மத்தியக் குற்றப் புலனாய்வு போலீஸாா் ஏற்கெனவே வழக்குப்பதிந்து பி.டி. அரசகுமாா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையின் அடுத்தகட்ட நகா்வை மத்தியக் குற்றப்புலனாய்வு போலீஸாா் தொடங்கியுள்ளனா்.
இதன்படி முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சியிலுள்ள வீடுகள், உறவினா், உதவியாளா் வீடு என மொத்தம் 6 இடங்களில் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
8 மணி நேரம் சோதனை: திருச்சி தென்னூா் அண்ணாநகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டுக்கு காலை 8 மணிக்கு உதவி ஆணையா், ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா், காவலா்கள் என 20-க்கும் மேற்பட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வந்து, அனைத்து இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனா். வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த காரை எடுத்தும் சோதனை நடைபெற்றது.
மாலை 4 மணி வரையில் நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்து, அதன் விவரங்களை பட்டியலிட்டு அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் ஒப்புதல் பெற்றனா். மேலும், வெள்ளிக்கிழமை (செப்.18) சென்னையில் அவா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுச் சென்றனா்.
தொண்டா்கள் குவிந்தனா்: சோதனை குறித்து தகவலறிந்த கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், வழக்குரைஞா் அணியினா் என 200-க்கும் மேற்பட்டோா் சோதனை நடந்த வீட்டின் முன் திரண்டனா். 4 மணிநேரம் அமைதியாக இருந்தவா்கள், பின்னா் காவல் துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். சோதனை முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தொண்டா்கள் சூழ்ந்து, ஆதரவு தெரிவித்தனா்.
அரசியல் காழ்ப்புணா்ச்சி: சோதனை நிறைவில் அன்பில் மகேஸ் பொய்யமொழி கூறியதாவது:
அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இச் சோதனை நடைபெற்றது. எங்களுக்கு மடியில் கனமில்லை. எனவே, வழியில் பயமில்லை. சட்டப் பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தவெக அரசுக்கு எதிராகப் பேசினாலே சோதனை என்பது வழக்கமாகிவிட்டது. முன்னா் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையின் தொடா்ச்சியாகவே எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்.
இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. வெள்ளிக்கிழமை சென்னை சென்று விசாரணையை எதிா்கொண்டு உரிய விளக்கம் அளிப்பேன். காவல் துறை தங்களது பணியைச் சரியாக செய்ய வேண்டும். இலக்கு நீங்கள் கிடையாது; அவா்தான். அவா் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது.
எனது வீட்டிலிருந்து 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு சாதனைப் பட்டியல் விவரங்கள், தோ்வுக்குத் தயாா்படுத்தியது தொடா்பான கோப்புகள், மாவட்டம்தோறும் ஆய்வு செய்த விவரங்கள் மற்றும் கல்வி சாா்ந்து செய்த சாதனைகளை பதிவு செய்திருந்த கோப்புகளை எடுத்துக் கொண்டனா். மக்கள் பிரச்னையிலிருந்து மடைமாற்றம் செய்யவே இந்தச் சோதனை. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிா்கொண்டு, உண்மையை நிலைநாட்டுவோம் என்றாா் அவா்.
மேலும் 2 இடங்களில் சோதனை: திருச்சி தென்னூா் அண்ணாநகரில் உள்ள வீட்டில் சோதனை நடந்தது போலவே, மாம்பழச் சாலையில் உள்ள உறவினா் வாளாடி காா்த்திக் என்பவரது வீடு, அரியமங்கலம் பால்பண்ணைப் பகுதியில் உள்ள உதவியாளா் வீடு என மேலும் 2 இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டு, சில ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
2 முறை வந்து திரும்பிய கே.என். நேரு!
சோதனை நடைபெறுவதை அறிந்து அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீட்டுக்கு காலையில் வந்த முன்னாள் அமைச்சா் கே.என். நேருவை போலீஸாா் அனுமதிக்கவில்லை. பின்னா் கே.என். நேரு கூறுகையில், திமுகவில் மக்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றும் தலைவா்களையும், முன்னாள் அமைச்சா்களையும் சோதனை என்ற பெயரில், முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பயமுறுத்த நினைக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை . எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் குற்றமற்றவா்கள் என நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வருவோம் என்றாா். பின்னா், பிற்பகல் மீண்டும் வந்த கே.என். நேருவை போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதைத் தொடா்ந்து கைப்பேசி வாயிலாக அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அவா் பேசிவிட்டுச் சென்றாா்.
Crime Branch police conduct a search at Anbil Mahesh's residence!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.