அல்கொய்தா ஆதரவு குழுவுடன் தொடர்பிலிருந்த உ.பி. இளைஞர் கோவையில் கைது

அல்கொய்தா பயங்கரவாத சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஆன்லைன் குழுவுடன் தொடர்பில் இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி என்ற இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முகமது நபீல் என்பவரை கடந்த வாரம் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒருவரை ஒருவர் ரகசியமாகத் தொடர்புகொள்ள மக்சூத் அலி என்பவர் பிரத்யேக செயலியை வடிவமைத்து தந்ததும், கோவையில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, உத்தர பிரதேச போலீசார் அளித்த தகவலின் பேரில், கோவையில் கல்லூரி மாணவர்கள் அதிகம் பேர் தங்கியிருக்கும் ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த மக்சூத் அலியை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, உத்தர பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவருடைய வாட்சப்பில் பாகிஸ்தான் எண்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவர் கோவை சென்ற நோக்கம் என்ன? இங்கு அவருக்கு உதவியவர்கள் யார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.