Politics
மதுராந்தகம்-தாராபுரம்! த.வெ.க.வின் அதிரடி பண வெடி!

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நடந்த மயிலாடுதுறை, அண்ணாநகர் தொகுதிகளின் இடைத்தேர்தல் போல மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எம்.ஜி.ஆர். முழு பலத்துடன் ஆட்சியில் இருந்தபோது நடந்த இந்த இடைத்தேர்தல்கள் இரண்டிலும் தி.மு.க. வெற்றிபெற்று பலத்த அதிர்ச்சியை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது. அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன் றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தி.மு.க.வே வெற்றி பெற்றது. அதுபோல மதுராந் தகம், தாராபுரம் தேர்தல் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வினர் பெரிதாக பணம் செலவு செய்யவில்லை. தி.மு.க. பெரிய அளவில் பணத்தை செலவு செய்தது. ஆனால், இந்த இடைத்தேர் தலை அப்படி சந்திக்க முடியாது என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை தாராபுரம் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா செங் கோட்டையனிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
"நீ கட்சி மாறி த.வெ.க.வுக்கு வா'' என அழைத்த செங்கோட்டையனிடம் பேசிய சத்திய பாமா, "நான் மொத்தம் நாற்பது கோடி செலவு செய்துதான் தாராபுரத்தில் வெற்றி பெற்றேன். எனக்கு சீட் தரவேண்டுமென்றால் இருபது கோடி ரூபாய் கட்சிக்கு நன்கொடை தர வேண்டும் என எடப்பாடியின் பேரைச் சொல்லி வேலுமணி என்னிடம் பணம் வாங்கிக் கொண்டார். அதற்குப்பிறகு பிரச்சாரம், ஓட்டுக்குப் பணம் என இருபது கோடிக்கும் மேல் செலவு செய்தேன். அ.தி.மு.க. தலைமை ரிசர்வ் தொகுதி வேட்பாளர் களுக்கு என பதினைந்து கோடி ரூபாய் கொடுத் தது. அதை என் கண்ணில் கூட காட்டவில்லை. அதையும் வேலுமணியே எடுத்துக் கொண்டார். இப்படி ஐம்பத்தைந்து கோடி ரூபாய் நஷ்டப் பட்டுதான் நான் எம்.எல்.ஏ. ஆனேன். அ.தி.மு.க. ஆட்சி வரும், அதில் நான் மந்திரி ஆவேன் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. எனக்கு குறைந்தபட்சம் ஐம்பது கோடி ரூபாய் தந்தால்தான் த.வெ.க.வுக்கு வருவேன்'' என்ற சத்தியபாமாவுக்கு கோடிகள் கொடுத்துதான் த.வெ.க.வுக்கு அழைத்து வந்தார் செங்கோட்டையன்.
அதேபோல் மதுராந்தகம் மரகதம் குமரவேல், "நானும் சும்மா ஜெயித்துவிடவில்லை'' என்கிறார். அவரது கணவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தையூர் என்கிற தலித் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாதாமாதம் கொடுக்கும் ‘கட்டிங்’ அமௌண்டே கோடிக்கணக் கில் வருமாம். அதையெல்லாம் செலவு செய்துதான் அரசியலில் இருக்கிறேன். இந்தமுறை அ.தி.மு.க. ஆட்சி வரும், என் கணவர் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து ஐம்பது கோடிக்கும் மேல் செலவு செய்துதான் நான் ஜெயித்தேன். த.வெ.க. ஆட்சியில் நான் சம்பாதிக்க வேண்டும், அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் எனக்குத் தரவேண்டும் என ஆதவ் அர்ஜுனாவிடம் ரேட் பேசித்தான் கட்சியில் சேர்ந்தது என்கிறாராம் மரகதம் குமரவேல்.
மதுராந்தகம் தொகுதியின் பொறுப்பாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பேற்றிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் மதுராந்தகம் தொகுதியின் மையப் பகுதியான மேல்மருவத்தூரில் வசதியான வீடு ஒன்றைப் பார்த்து தங்கிவிட்டார். முதல்வர் விஜய்யுடன் லண்டன் சென்றுள்ள ஆதவ் அர்ஜுனா தங்கு வதற்கு தாராபுரத்தில் வீடு ஒன்று தயாராகவுள் ளது. இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க.வின் ஒரிஜினல் ஸ்டைலான காசில்லாமல் ரசிகர்மன்ற பொறுப்பாளர்களை வைத்து வேலை வாங்குவது நடக்காது என தலைமைக்குத் தெரிவித்துவிட் டார்கள். அதனால் முதல்முறையாக பணத்தை செலவு செய்து தேர்தலை சந்திக்கவேண்டிய கட்டாயத்துக்கு த.வெ.க. ஆளாகியுள்ளது.
மதுராந்தகத்தில் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் வன்னியர்களின் பங்கு முக்கியமானது. அதேபோல் தாராபுரத்தில் கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்கு மிக முக்கிய மானது. தலித்துகளைத் தவிர அந்த இரு சமூகத்தினரையும் சரிக்கட்டுவது என்பது இந்த இடைத் தேர்தலில் மிக முக்கியமானது. மதுராந்தகத்தில் வி.சி.க., த.வெ.க. முகாமில் இடம்பெற்றிருப்பது வன்னியர்கள் மத்தியில் ஒரு எதிர்நிலை விசயமாகவே பார்க்கப்படுகிறது. பா.ம.க.வும், எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு தி.மு.க. மீது மென்மையான அணுகு முறையை கடைப்பிடித்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தாலும் பா.ஜ.க. கொங்கு மண்டலமான தாராபுரத்தில் தனது வலுவைக் காட்டினாலும், தி.மு.க. இவர்களைச் சமாளிக்க வியூகங்களை அமைத்து வருகிறது. த.வெ.க.விடம் இருக்கும் ஒரே வியூகம் விஜய்யின் பிரச்சாரம்தான். இரண்டு தொகுதிகளிலும் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் செலவுசெய்ய முடிவு செய்துள்ள கோடிகளையும் தாண்டி பணத்தை இறைக்க த.வெ.க. முடிவு செய்துள்ளது என்கிறார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர். தாராபுரத்தில் முன்பைவிட அதிகமாக பணம் செலவிட்டால்தான் ஜெயிக்க முடியும் என சத்தியபாமாவே தலைமையிடம் சொல்லிவிட்டார். இரண்டு தொகுதிக்கும் சேர்த்து நூற்றுக்கணக்கான கோடிகளை த.வெ.க. இறைக்கத் திட்டமிட்டுள்ளது. ‘யாராக இருந்தாலும் விலைக்கு வாங்கு’ என்கிற தத்துவத்துடன் த.வெ.க. இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. “இந்தத் தேர்தலில் தோற்றால் நமது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லி விஜய்யை எச்சரிக்கை செய்துள்ளாராம்’ ஜான் ஆரோக்கியசாமி.
இறுதிச்சுற்று!
அஜித்குமார் வழக்கில் திருப்பம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்... காவல் நிலையத் துக்கு வெளியே தோப்பில் வைத்து கொடூர தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். செப்டம்பர் 10ஆம் தேதி, வியாழனன்று, இவ்வழக்கில் தொடர்புடைய மானா மதுரை சரக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீதான சதி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, டி.எஸ்.பி., ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்படலாமெனத் தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)