Health
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் அபராதம்! நகரில் 5 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில், கொசுப்புழு உற்பத்தி இடங்களை கண்டறிந்தால் அபராதம் விதிக்கப்படும், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட, 36 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது, மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகராட்சி சுகாதாரப்பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறிந்து உடனடியாக துாய்மை பணி மேற்கொள்கின்றனர். இப்பணிகளை நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி நகரில், வீடுதோறும் நேரிடையாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், டயர் கடைகள், வணிக நிறுவனங்கள், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்கள், காலிமனைகள் மற்றும் வீடுகள் தொடர்ந்து கண்காணிப்படுகின்றன.
டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் மற்றும் தேவையற்ற கொள்கலன்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும்.
கட்டுமான பொருட்கள், பயன்படுத்தப்படாத தொட்டிகள், பிற பொருட்களில் மழைநீர் தேங்கினால் அவை கொசுப்புழு உற்பத்தி மையங்களாக மாறும். அதனால், கட்டுமான உரிமையாளர்கள் தினமும் கண்காணித்து தண்ணீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்த வேண்டும்.
காலிமனைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத கொள்கலன்கள் குவிப்பதை தடுக்க வேண்டும்.
காலி மனை உரிமையாளர்கள் தங்களது இடங்களை முறையாக பராமரிக்க தவறி, கொசு உற்பத்தி, சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் வைத்திருந்தால் நகராட்சி விதிகளின் படி அபராதம் விதிப்பதுடன், பொதுச்சுகாதார சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நகர் பகுதியில், தேவையான பகுதிகளில் தினமும் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்படுகிறது. வீடு, வீடாக சென்று தேவையற்ற டயர்கள், தேங்கியுள்ள தண்ணீர், கொசுப்புழு உற்பத்தியாகக்கூடிய கொள்கலன்கள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் வாரத்துக்கு ஒரு முறை, 10 நிமிடங்கள் ஒதுக்கி தண்ணீர் தேங்க கூடிய அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். வீடு, கடை, கட்டுமானப்பகுதி மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்காமல் பராமரிப்பதன் வாயிலாக டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் குறித்து தகவல்களை உடனடியாக அருகில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமககள், வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.