Health
வீடுகள் முன் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் சுகாதார துறை துணை இயக்குநர் அறிவுறுத்தல்
திருத்தணி, செப். 4– வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என, மாவட்ட சுகாதார துறை

வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் பிரியாராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சி, இஸ்லாம் நகர் கிராமத்தில், நேற்று பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி, சுகாதார ஆய்வாளர் முரளி ஆகியோர் தலைமையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குநர் பிரியாராஜ், கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டார்.
பின், கிராம மக்களிடம் பிரியாராஜ் கூறியதாவது:
தற்போது, டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளதை தடுக்கும் வகையில், சுகாதார துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர்.
டெங்கு கொசு வளரும் தேங்காய் மூடி, உரல், டயர், டியூப், வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் தண்ணீர் ஆகிய இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் தேவையில்லாத பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டாம். வீட்டை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கட்டாயம் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சியின் துாய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.