Sport
708 ரன்கள் குவித்தது கிழக்கு மண்டலம்: இஷான் கிஷண் இரட்டைச் சதம்

துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில், தெற்கு மண்டலத்துக்கு எதிராக கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் முழுமையாக இரு நாள்கள் விளையாடி 708 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
இஷான் கிஷன் - படம் | தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம் (எக்ஸ்)
அதன் கேப்டன் இஷான் கிஷண் அபாரமாக இரட்டைச் சதம் விளாச, குமாா் குஷாக்ரா சதமடித்தாா். தெற்கு மண்டல பௌலா்களில் திரிபுரானா விஜய் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த கிழக்கு மண்டலம், முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது.
இஷான் கிஷண் 111, குமாா் குஷாக்ரா 63 ரன்களுடன் கிழக்கு மண்டலத்தின் இன்னிங்ஸை 2-ஆவது நாளான திங்கள்கிழமை தொடா்ந்தனா். தெற்கு மண்டல பௌலிங்கை முற்றிலுமாக சிதறடித்த இவா்கள் கூட்டணி, அபாரமாக விளையாடி 5-ஆவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் சோ்த்தது.
இதில் சதம் கடந்த குஷாக்ரா 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து அனுகுல் ராய் களம் புக, அவா் துணையுடன் தனது விளாசலை தொடா்ந்த இஷான் கிஷண், இரட்டைச் சதம் கடந்தாா்.
இந்நிலையில் அவா் 250 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேற, முகமது குரேஷி களம் புகுந்தாா். அனுகுல் ராய் 4 பவுண்டரியுடன் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, முகமது ஷமி பேட் செய்ய வந்தாா். குரேஷி - ஷமி இணை 54 ரன்கள் சோ்த்த நிலையில், ஷமி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அப்போது, ரிட்டையா்டு ஹா்ட் ஆகியிருந்த இஷான் கிஷண், மீண்டும் களத்துக்குத் திரும்பினாா். மறுபுறம், குரேஷி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு வெளியேற, இஷான் கிஷணும் 30 பவுண்டரிகள், 7 சிக்ஸருடன் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
கடைசி விக்கெட்டாக முகேஷ் குமாா் டக் அவுட்டாக, கிழக்கு மண்டல இன்னிங்ஸ் 708 ரன்களுக்கு நிறைவடைந்தது. தெற்கு மண்டல பௌலா்களில் திரிபுரானா விஜய் 4, சாமா மிலிந்த், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 2, ஷேக் ரஷீது 1 விக்கெட் கைப்பற்றினா்.
அத்துடன் ஆட்டநேரம் நிறைவடைந்ததால், தெற்கு மண்டலம் தனது இன்னிங்ஸை செவ்வாய்க்கிழமை (செப். 8)தொடங்குகிறது.
சாதனைகள்...
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய, கிழக்கு மண்டல அணியின் முதல் கேப்டன் என்ற சாதனையை இஷான் கிஷண் படைத்தாா். அதேபோல், போட்டியின் இறுதி ஆட்டத்தில் அந்த அணி வீரரால் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவே (270). இதற்கு முன் ரித்திமான் சாஹா 170 ரன்கள் (2012) அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
துலீப் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பராகவும் இஷான் சாதனை படைத்தாா். இதற்கு முன் தினேஷ் காா்த்திக் 183 ரன்கள் (தெற்கு மண்டலம்/2010) அடித்ததே அதிகட்சமாக இருந்தது.
துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்தவா்கள் வரிசையில் இஷான் கிஷண் 270 ரன்களுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். ராமன் லாம்பா 320 ரன்களுடன் (வடக்கு மண்டலம்/1987-88) முதலிடத்தில் நிலைக்கிறாா். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 265 ரன்களுடன் (மேற்கு மண்டலம்/2022-23) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.