Politics
“முதல்வரை காவல்துறையினரே டம்மி சிஎம்-ஆக நினைக்கிறார்களா?” - கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!

கடன் பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே பிரதீப் என்ற 26 வயது இளைஞர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப்பின் தாயார் டில்லி ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால், நவநீதம் கூடுதலாக வட்டிப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நவநீதம், பிரதீப் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசர் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதீப் நேற்று முன் தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நவநீதம் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை சிலர் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதீப் மர்ம நபர்களால் நேற்று இரவு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனதூ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே டம்மி சிஎம் (DUMMY CM) ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, அமலாக்கத்துறை என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று டைவர்ட் செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)