Sport
கிழக்கு மண்டல அணி சாம்பியன்: துலீப் டிராபியில் கலக்கல்

சென்னை: துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில், தெற்கு, கிழக்கு மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டலம் 708, தெற்கு மண்டலம் 336 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 212/5 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது குஷாக்ரா (46) அவுட்டானார். பின் இணைந்த முகமது கவுனைன் குரேஷி, அனுகுல் ராய் ஜோடி கைகொடுத்தது. குரேஷி, முதல் தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அனுகுல் ராய் அரைசதம் விளாசினார். ஏழாவது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்த போது அனுகுல் ராய் (64) அவுட்டானார்.
மூன்றாவது முறை: கிழக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 388/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள சம்மதம் தெரிவிக்க, போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 424 ரன் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டல அணி, மூன்றாவது முறையாக (2011-12, 2012-13, 2026-27) கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷான் (270, 80 ரன்) வென்றார். தொடர் நாயகன் விருதை தெற்கு மண்டல அணி கேப்டன் திலக் வர்மா (266 ரன்) தட்டிச் சென்றார்.


