Arts, culture, entertainment and media
அம்பாசமுத்திரத்தில் கனமழை; நெல் மூடைகள் நனைந்து சேதம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் அறுவடை செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் நனைந்து சேத மடைந்தன.
அம்பாசமுத்திரத்தைச் அடுத்துள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்மணிகளை வீடுகளின் முன்பும், சாலையோரங்களிலும் குவித்து வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை பெய்த திடீர் கனமழையால் அவை நனைந்தன. அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப் பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூடைகளும் மழையில் நனைந்தன.
தொடர்ந்து மழை பெய்தால் நெல்மணிகள் முளைத்து மேலும் சேதமடையும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.