Arts, culture, entertainment and media
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: சின்னப்பரூர் விவசாயிகள் அதிருப்தி
விருத்தாசலம்: சின்னப்பரூரில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.: மாவட்டத்தில் சொர்ணவாரி அறுவடைக்கு 110க்கும் அதிகமாக கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இடம் பற்றாக்குறை காரணமாக, ஆங்காங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன.
இதனால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும் மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இருப்பினும், கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதுபோல், சின்னப்பரூர் கொள்முதல் நிலையத்தில் குவிந்து கிடந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திடீர் மழையில் முளைத்து வீணாகியுள்ளன. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோல், மாவட்டம் முழுவதும் திடீர் மழையால் வீணாகிய நெல்லிற்கு இழப்பீடு பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.