Arts, culture, entertainment and media
மின் தடையால் மொபைல்போன் வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்

வேலுார்: ''இரண்டு தொகுதி இடைத்தேர்தலில், கம்யூ., கட்சிகள் போட்டியிடுவதால், த.வெ.க.,வுக்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாது,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலுாரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது, அங்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், போதிய வெளிச்சம் இல்லாமல், மொபைல் போன் வெளிச்சத்தில் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
சிறிது நேரம் கழித்து, மின்சாரம் வந்தது. தமிழகம் முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவும் சூழலில், அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியின் போது செங்கோட்டையன் கூறியதாவது:
விவசாய நிலங்களை, பி ற பயன்பாட்டுக்கு எளிதாக மாற்ற வழி செய்யும் அரசின் சட்ட திருத்தத்தால், உணவு பாதுகாப்பில் பேரழிவு ஏற்படும் என கூறுகின்றனர்.
விவசாயிகளின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் பார்க்கும்போது, தேவையான விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டு, பன்மடங்கு கூடுதலாக உணவு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அன்றைய மக்கள் எவ்வளவு உணவு அருந்தினர்; இன்றைக்கு மக்கள் எவ்வளவு உணவு அருந்துகின்றனர் என்பதையும் அனைவரும் அறிவர்.
நில வரி, இன்றைக்கு தமிழகத்தில் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் நில வரி இருந்தது. விவசாய நிலத்தில் வருவாய் இருந்ததால் வரி போட்டனர்.
இப்போது, பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், குடிநீர் உள்ளிட்டவைக்கு வரி போடப்படுவதால், நில வரி கிடையாது.
இடைத்தேர்தலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால், த.வெ.க.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
முதல்வர் விஜயின், லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகின்றனர்.
எல்லாரும் எதையாவது சொல்வர். வெளியில் இருந்து பேசுவது சுலபம்; செயல்படுத்துவது கடினம். ஒரு தொழில் முதலீட்டாளர் வர, அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகள், தடை இல்லா மின்சாரம், போக்குவரத்து ஆகியவை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலுாரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால், போதிய வெளிச்சம் இல்லாமல், மொபைல் போன் வெளிச்சத்தில், செங்கோட்டையன் பேட்டி அளித்தார். சிறிது நேரம் கழித்து, மின்சாரம் வந்தது. தமிழகம் முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவும் சூழலில், அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.