Religion
5,100 விநாயகர் சிலை! திருப்பூர் மாவட்டத்தில் இன்று பிரதிஷ்டை ஹிந்து முன்னணி சார்பில் கோலாகல விழா

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 5,100 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகாலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்கின்றனர். ஹிந்து முன்னணி சார்பில், நகரில், ஆயிரத்து எட்டு உட்பட மாவட்டம் முழுதும், 5 ஆயிரத்து, 100 சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவபெருமானுடன் உடன் இணைந்து இருக்கும் வகையில், ஸ்ரீசக்தி விநாயகர், அனுமன் துாக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை விநாயகர், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர் என, 50க்கும் மேற்பட்ட வடிவங்களில், 3.5, 7, 9 மற்றும் 10 அடிகள் என, ஐந்து வகைகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்கின்றனர்.
இன்று துவங்கிய வரும், 17 ம் தேதி வரை, நான்கு நாட்களும், மூன்று வேளைகளும் பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விசர்ஜனம் நாள் வரை, ஒவ்வொரு நாளும் சிறுவர், சிறுமியர்களுக்கான கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான குத்துவிளக்கு பூஜை என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 15ம் தேதி ஊத்துக்குளி, காங்கயம், குன்னத்துார், குண்டடம் மற்றும் 16ம் தேதி அவிநாசி, பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளிலும், 17ம் தேதி திருப்பூர் மாநகரிலும், விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் ரோடுகள், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் ஆகியவற்றை திருப்பூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் துணை கமிஷனர்கள், மாநகராட்சி மற்றும் மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.