Politics
பட்டினப்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம்: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சட்டசபையில் செப்.3ம் தேதியன்று, விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை முதல்வர் விஜய் வாசித்தார். அப்போது 1200 ரூபாய் கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்திற்காக எந்த பகுதியை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்தன.
இந் நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த அரசாணையின் படி, பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த 3 தனித்தனி குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
கட்டடக்கலை நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழு, வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்க என 3 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் விரிவான திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.