Crime, law and justice
வீட்டு பிரசவத்தில் பழங்குடியின பெண் பலி :விறகு கடை உரிமையாளர் மீது வழக்கு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில், சிறு கொட்டகையில் நடந்த பிரசவத்தின்போது மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காததால், பழங்குடியின பெண்ணும் அவரது குழந்தையும் பலியான சோக சம்பவத்தில், விறகு கடை உரிமையாளர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46. இவரது மனைவி தேன்மொழி, 45. இவர்கள், வெள்ளைகேட் பகுதியைச் ஆறுமுகம், 75, என்ற விறகு வியாபாரியிடம், முன்பணமாக 20 ஆயிரம் பெற்றுக் கொண்டு, வேலை செய்யும் இடத்திலேயே சிறு கொட்டகையில் தங்கி, மரம் வெட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். தேன்மொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
உடன், அவர்களது மகள் காவியா, 19, மருமகன் முத்து, 22. தங்கி, இரு குடும்பங்களாக மரம் வெட்டும் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 4:00 மணியளவில், நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறு கொட்டகையிலேயே கணவர் முன் பிரசவம் நடந்துள்ளது. குழந்தை உடல் பாதி வெளிவந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக, உடல்நிலை பாதிப்படைந்து கணவர் கண்முன்னே தேன்மொழியும், குழந்தையும் இறந்தனர்.
அப்போது, விறகு கடை உரிமையாளரான ஆறுமுகத்திற்கு மொபைல் போனில் அழைத்த ஆனந்தன், தேன்மொழி இறந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் ஆறுமுகம், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சிகிச்சைக்காக வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், தேன்மொழியை பரிசோதனை செய்து, அவர் இறந்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 2,000 ரூபாய் கொடுத்த ஆறுமுகம், பெண் மற்றும் குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு, சொந்த ஊரான சிங்காடிவாக்கத்திற்கு செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மனைவி மற்றும் குழந்தை இறப்புக்கு, ஆறுமுகம் தான் காரணம் எனவும், சிகிச்சை எடுக்க அவர் அனுமதிக்கவில்லை என, பொன்னேரிக்கைர காவல் நிலையத்தில், ஆனந்தன் புகார் அளித்துள்ளார்.
உரிமையாளரிடம் முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றிருப்பதாகவும், சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல அனுமதி கேட்டாலும், எங்களை ஆறுமுகம் அனுமதிக்கவில்லை என புகாரில் ஆனந்தனர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆறுமுகம், 75, மீது, பொன்னேரிக்கரை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.