Crime, law and justice
‘பணத்தை கொடுத்துட்டு போ..’ பிரசவ வலியில் துடித்த பெண்ணை தடுத்த நபர்.. தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்!

காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடாரத்திலேயே பிரசவம் நடந்து, கடுமையான வலி, ரத்தப்போக்கால் தாய், பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூக தம்பதி ஆனந்தன் (40), தேன்மொழி (35). அரக்கோணம் சாலை வெள்ளை கேட் அருகே மரம் வெட்டும் பணியில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு இருளர் தம்பதியும் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்குமாறு கணவருடன் சேர்ந்து மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரிடம் பெற்றிருந்த ரூ.20,000 கடனை செலுத்தாமல் பணியிடத்தை விட்டு செல்லக்கூடாது எனக் கூறி மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கூடாரத்திலேயே பிரசவம் தொடங்கிய நிலையில், குழந்தையின் உடல் பாதி வெளியே வந்தபோது கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும், பிறந்த பச்சிளம் குழந்தையும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொன்னேரிகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்ல தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணைக்குப் பின்னரே முழு உண்மை தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.