குட்கா கடத்திய 2 பேர் கைது 500 கிலோ பறிமுதல்
விழுப்புரம்: காரில் குட்கா கடத்திய ராஜஸ்தான் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பை பாஸ் சாலையில், தாலுகா இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட, 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 507 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது, தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களை விசாரித்தபோது, ராஜஸ்தானை சேர்ந்த திலீப் பாரதி, 30; தினேஷ்குமார், 22; என்பதும், பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு கொடுக்க எடுத்து வந்ததும் தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து திலீப் பாரதி, தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, கார் மற்றும் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.