Crime, law and justice
வாங்கிய கடனுக்கு நிறுத்திவைக்கப்பட்ட பிரசவம், உயிரிழந்த பழங்குடி தாய், சேய்... கொத்தடிமை அவலம்!

எங்க குடும்பத்துல மொத்தம் அஞ்சு பேரு. நானு, என்னோட மனைவி, ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுக்குக் கல்யாணமாகி, எங்களோட மருமகனும் இப்போ எங்க கூடதான் இருக்காரு.
கொத்தடிமை முறை என்பது ஏதோ ஒரு காலத்தில் இருந்தது எனப் பலரும் நினைக்கும் இதே சமூகத்தில், இன்றும் பலர் கொத்தடிமைகளாகச் சிறை வைக்கப் பட்டுள்ளனர் என்பதே உண்மை. அது, பேரவலமும்கூட. அதிலும், வாங்கிய கடனுக்காக, மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழலில் சிறைவைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பிரசவவலி வந்து, பரிதாபமாக, அநியாயமாக உயிரிழந்திருக்கும் செய்தி, அரசு நிர்வாகத்தின் முகத்தில் அறைகிறது. நம் நெஞ்சில் கனக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைக்காகத் தங்கியிருந்த பழங்குடியினத் தம்பதியான தேன்மொழி, ஆனந்தனுக்கு நேர்ந்த இந்தத் துயரம், மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
ஆறுமுகம் என்பவரிடம் 20,000 ரூபாய் முன்பணம் பெற்று, விறகு வெட்டும் வேலை செய்து வந்த ஆனந்தன் - தேன்மொழி தம்பதி, வேலை நடைபெறும் வெள்ளை கேட்டிலேயே தார்ப்பாய் கொட்டகை அமைத்துத் தங்கவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தார்ப்பாய் கொட்டகையில் பிரிந்த உயிர்கள்!
செப்டம்பர் 8-ம் தேதி மதியம், தார்ப்பாய் கொட்டகைக்குள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தேன்மொழியின் பிரசவம் 20,000 ரூபாய் கடனுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது கொடுமை. பிரசவ வலி அதிகரித்த நிலையில், அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வழியில்லாமல், உதவிக்காக முதலாளியைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார் ஆனந்தன். ஆனால், அழைப்புகள் எடுக்கப்படவில்லை.
சில மணி நேரத்தில், அந்தத் தார்ப்பாய் கொட்டகை யிலேயே தேன்மொழியும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்திருக்கிறார்கள்.
தேன்மொழிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், தன் முதலாளி ஆறுமுகம் மருத்துவமனைக்கு அனுப்பாமல் வேலை வாங்கியதாக ஆனந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கலங்கிய கண்களுடனும் குழறிய குரலுடனும் நம்மிடம் பேசினார் ஆனந்தன்.
`ஆறு மாசமா வேலைபார்க்குறோம்!’
“எங்க குடும்பத்துல மொத்தம் அஞ்சு பேரு. நானு, என்னோட மனைவி, ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுக்குக் கல்யாணமாகி, எங்களோட மருமகனும் இப்போ எங்க கூடதான் இருக்காரு. நாங்க எல்லாரும் கூலி வேலைக்குத்தான் போவோம். மரம் வெட்டுறதுதான் எங்களுக்குத் தெரிஞ்ச தொழில். அதுக்காக, ஆறுமுகம்னு ஒரு முதலாளிகிட்ட வேலை பார்த்துட்டு இருந்தோம்.
சொந்த ஊரைவிட்டுட்டு முதலாளி கூப்பிடுற எல்லா இடத்துக்கும் போவோம். ராத்திரினு பார்க்காம, பகல்னு பார்க்காம உழைப்போம். ஆறு மாசத்துக்கு முன்னாடி, முதலாளி ஆறுமுகத்துக்கிட்ட நான் 20,000 ரூபாய் பணம் வாங்கியிருந்தேன். அதுக்காக, வெள்ளை கேட்டுங்கிற இடத்துல ஆறுமுகமே தார்ப்பாய் கொட்டகை போட்டு, அங்கேயே தங்கி வேலைபார்க்கச் சொன்னாரு. அங்கதான் ஆறு மாசமா குடும்பமா தங்கி வேலை பார்த்துட்டு இருக்கோம். அங்க குடிவந்ததுக்கு அப்புறம்தான், என்னோட பொண்டாட்டி தேன்மொழி மாசமா இருக்கிறதா தெரிஞ்சது.
ஆறுமுகம் அதிகமா வேலை வாங்குவாரு. அதுக்கு ஏத்த கூலி தரவே மாட்டாரு. ஒரு நாள் அப்படித்தான், ‘காசு வேணும்... குழம்புக்குக்கூட எதுவும் இல்ல’னு அவர்கிட்ட போய் நின்னேன். முதுகுலேயே அடிச்சிட்டாரு. எதிர்த்துப் பேசினா, கேள்வி கேட்டா பொழப்புப் போயிருமேனு பொறுத்துக்கிட்டு திரும்பிவந்துட்டேன்” என்றவர், சம்பவம் நடந்த தினம் பற்றி தொடர்ந்தார்.
`அஞ்சு தடவை போன் பண்ணியும் எடுக்கல!’
“என்னோட பொண்டாட்டிக்கு அப்பப்போ வயிறுவலி வரும். `ஆஸ்பத்திரிக்குப் போகணும், லீவு வேணும்’னு கேட்டாலும் முதலாளி ஆறுமுகம் தர மாட்டாரு. அப்படித்தான், போன புதன்கிழமை (செப்டம்பர் 9) அன்னிக்கும் அவளுக்கு உடம்புக்கு சரியில்ல. ஆனாலும் வேலைக்குக் கிளம்பினோம். அப்போ, ‘மாமா, வயிறு ரொம்ப வலிக்குது’னு தேன்மொழி சொன்னா. நான், வெறும் வெளக்கெண்ணெயை மட்டும் வயித்துல தடவி, ’சரியாகிரும்’னு சொல்லி விட்டுட்டு வேலைக்குப் போயிட்டேன். திரும்ப மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் போனப்போ, தேன்மொழி பேச்சு, மூச்சு இல்லாம கீழ கிடந்தா.
நான் முதலாளி ஆறுமுகத்துக்கு அஞ்சு தடவை போன் பண்ணினேன். அவரு எடுக்கவே இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு அவரு திரும்பப் பண்ணினாரு. தேன்மொழியோட நெலமையைச் சொன்னேன். ஆம்புலன்ஸ் வண்டியைக் கூட்டிட்டு வந்தாரு. ஆனா, உசுரு போயிருச்சுனு ஆம்புலன்ஸ்ல வந்தவங்க சொல்லிட்டாங்க. அப்போ முதலாளி ஆறுமுகம், ‘விடுடா... இவ போனா என்ன? ஒங்க ஊர்லயே பார்த்து வேற பொண்ணைக் கட்டிக்கோ’னு சொல்லிட்டு, 2,000 ரூபாய் கொடுத்துட்டுப் போனவருதான். இப்போ வரைக்கும் அவரை காணோம். வலி வந்தப்போவே என் தேன் மொழியை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருந்தா, இப்போ என்கூட என் பொண்டாட்டியும், புள்ளையும் இருந்திருப் பாங்க’’ என்று கூறி அழுத ஆனந்தனுக்கு ஆறுதல் கூறினோம்.
`பழங்குடிகளோட உரிமையை, அரசு பறிக்குது!’
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புராஜிடம் பேசினோம்.
“இந்தப் பழங்குடி மக்களுக்குத் தங்களுடைய வாழ்வாதாரத்தைத் தாங்களே உருவாக்கிக்கிற உரிமை கிடைக்கணும். ஆனா, அவங்க காட்டுக்குள்ள போய் தங்களுக்குத் தேவையானதைச் சேகரிச்சு வாழக்கூட அவங்களுக்கு இங்க பல தடைகள் இருக்கு. காட்டுக்குள்ள போறதுக்கான உரிமையைக்கூட இந்த அரசு அவங்களுக்குக் கொடுக்கல.
அந்த ஒரு உரிமை மட்டும் அவங்களுக்கு இருந்திருந்தா, அவங்க தங்களுக்குத் தெரிஞ்ச வாழ்க்கை முறையில வாழ்ந்திருப்பாங்க. இப்படி வேலை தேடிப்போய், இன்னொருத்தர்கிட்ட முன்பணம் வாங்கிட்டு, அவங்க சொல்ற இடத்துல தங்கி வேலை செய்ய வேண்டிய நிலை வந்திருக்காது. ரெண்டு உயிர்களும் போயிருக்காது.
அதனால, இந்தச் சம்பவத்துல யார் மேல நடவடிக்கை எடுக்கணும் என்பதோட மட்டும் நின்னுடாம, பழங்குடி மக்கள் ஏன் இப்படியான சூழலுக்குத் தள்ளப்படுறாங்கனு அரசு விசாரணை நடத்தணும். அவங்களுக்கான வாழ்வாதாரம், மருத்துவ வசதி, பாதுகாப்பு, உரிமைனு எல்லாத்தையும் உறுதி செய்யணும். அப்போதான், இதுபோன்ற கடன் கொடுமைகள், கொத்தடிமை கொடுமைகள், உயிரிழப்புகளை எல்லாம் தடுக்க முடியும்” என்று வலியுறுத்தினார் அன்புராஜ்.
எளிய மக்களின் உரிமையும் உயிர்களும் அரசுக்குப் பொருட்டாகுமா?
மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம், 1976 பிப்ரவரி 9, 1976 அன்று அமலுக்கு வந்தது. இதன்படி, கொத்தடிமைக்காகப் பெறப்பட்ட அனைத்து கடன்களும், வட்டியும் சட்டப்படி ரத்து செய்யப்படும். கொத்தடிமைகளாக உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்; அவர்கள் மீதான பிணை பத்திரங்கள்/ஒப்பந்தங்கள் செல்லாது. மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மறுவாழ்வு வழங்கும். ஒருவரை கொத்தடிமை தொழிலைச் செய்ய வற்புறுத்துபவர்களுக்கும், கடனை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கும் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
