Religion
விநாயகர் ஊர்வலத்தால் களைகட்டிய தஞ்சை... வடவாற்றில் கரைக்கப்பட்ட 58 சிலைகள்

தஞ்சாவூர் மாநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 85 விநாயகர் சிலைகளில் 58 சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாநகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 85 விநாயகர் சிலைகளில் 58 சிலைகள் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்த சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3வது அல்லது 5வது நாளில் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தஞ்சையில் நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகளுக்கும், தஞ்சாவூர் மாநகரில் 85 விநாயகர் சிலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் நேற்று கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்ட நிலையில், தஞ்சை நகர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் 58 சிலைகள் ரயிலடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
