Politics
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி; உறவினர்கள் போராட்டம்

மீஞ்சூர்: மின்வாரிய ஒப்பந்த ஊழியரான சிவராமன், 39, பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், மீஞ்சூர் காவல் நிலையம் முன் இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன், 39. இவர், மேலுார் துணை மின் நிலையத்தில், 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து, மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை சிவராமனின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே சமயம், பழவேற்காடு பறவைகள் சரணாலய பகுதியை ஆய்வு செய்வதற்காக, அவ்வழியாக சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரிடம் இது தொடர்பாக முறையிட்டனர். அப்போது அவர், ‘‘இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, உறுதியளித்தார்.
மேலும், சிவராமனின் ஈம சடங்குகளுக்காக, தன் சொந்த நிதியில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதை தொடர்ந்து, சிவரமானின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.