Arts, culture, entertainment and media
மண்டாடி - சினிமா விமர்சனம்

காலம் தனக்குக் கொடுத்திருக்கும் இரண்டாம் வாய்ப்பை இறுக்கிப்பிடிக்கும் மண்டாடியாக, முதிர்ச்சியான நடிப்பை வழங்கி ஒரு நடிகராக நிமிர்ந்து நிற்கிறார் சூரி.
பகையைத் தீர்க்க, மீண்டும் படகுப் போட்டியில் குதிக்கும் ‘மண்டாடி'யின் கதை.
சென்னையில் வசிக்கும் முத்துக்காளியைத் (சூரி) தேடி வருகிறார் முகவைப் பட்டினத்தைச் சேர்ந்த மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஊரில் படகுப் போட்டி தொடர்பான சண்டையில் மாரியைக் கொல்லக் காத்திருக்கிறார் சாட்டைப்புலி (சுஹாஸ்). மாரியைக் காப்பாற்ற, 20 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்புகிறார் முத்துக்காளி. ஒருகாலத்தில் படகுப் போட்டியில் `மண்டாடி’யாக ஜொலித்த முத்துக்காளி, ஏன் சென்னைக்குச் சென்றார், வரவிருக்கும் போட்டிக்கு மாரியின் அணியை அவர் எப்படித் தயார் செய்கிறார் என்பதே மீதிக்கதை.
காலம் தனக்குக் கொடுத்திருக்கும் இரண்டாம் வாய்ப்பை இறுக்கிப்பிடிக்கும் மண்டாடியாக, முதிர்ச்சியான நடிப்பை வழங்கி ஒரு நடிகராக நிமிர்ந்து நிற்கிறார் சூரி. ஃபிளாஷ்பேக்கில் சாந்தமான முகம், நிகழ்காலத்தில் நம் வெறுப்பைச் சம்பாதிக்கும் வில்லன் வேடம் என மிரட்டல் நடிப்பை வழங்கியிருக்கிறார் சுஹாஸ். ஆனால், அந்த டப்பிங் குரல்... ம்ஹூம்ம்! அற்புதமாக எழுதப்பட்ட பாத்திரத்தில், அசத்தலாக ஸ்கோர் செய்கிறார் மஹிமா நம்பியார். அனுபவ நடிப்புக்கு சத்யராஜ், இளமைக்கே உரிய வேகத்துக்கு மிதுன் ஜெய் சங்கர், அவர் காதலியாக கிருத்திகா, காமெடிக்கு பாலசரவணன், நிதானம் காட்ட ரவீந்திர விஜய், வில்லனின் அப்பாவாக ‘ஸ்டன்’ சிவா எனப் பலதரப்பட்ட நடிகர்களுடன் பாய்மரத்தைச் சீராகச் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
பிரமாண்ட படகுப் போட்டி, அதில் நடக்கும் விபத்துகள், வீரர்களின் சாகசங்கள் என நடுக்கடல் தருணங்களை பிரமிப்பூட்டும் வகையில் படம் பிடித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், மகேஷ் மாத்யூ ஸ்டன்ட் கூட்டணி. விறுவிறு திரைக்கதைக்கும், படகுப் போட்டிக்கும் இசைந்தவாறு துடுப்புப் போட்டிருக்கிறது படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ்-வின் கத்தரி! ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதையின் போக்குக்கு உதவ, பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தேவையான உத்வேகத்தை அளித்திருக்கிறது.
படகுப் போட்டி, அதன் பின்னிருக்கும் அரசியல், சாதியப் பாகுபாடுகள் என முற்றிலும் வேறோர் உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். பாய்மரப் படகுப் போட்டிதான் படத்தின் ஆன்மா என்றாலும், அதை மட்டுமே வட்டமடிக்காமல் கரையில் நடக்கும் கதைக்கும் முக்கியத்துவம் அளித்தது முதிர்ச்சியான முடிவு. முத்துக்காளி - ஏஞ்சல் - சிங்காரம் கதையில் ஏஞ்சலிடம் வெளிப்படும் சீற்றமும், அதன் பிறகான அமைதியும் கடல் அழகைக் கவிதையாக வார்த்த இடங்கள்!
சொல்ல வந்தது புரிந்த பிறகும் நீளமாக நீளும் ஃபிளாஷ்பேக் காட்சி, அநாவசிய ஸ்லோமோஷன் ஹீரோ பில்டப்புகள் இந்தக் கதைக்கு அவசியமில்லையே இயக்குநரே?! அதுவரை சொதப்பிடாத மேக்கிங், சுழல் காட்சிகளில் தடுமாறுவது ஏமாற்றமே!
எழுத்திலும் மேக்கிங்கிலும் மிரட்டும் `மண்டாடி' தமிழ் சினிமாவின் புதிய பாய்ச்சலுக்கான பாய்மரம்!
