Arts, culture, entertainment and media
Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!
கடலோடி மக்களின் வாழ்வியலைப் பேசும் சூரியின் 'மண்டாடி' திரைப்படத்தைப் பாராட்டிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். | Naam Tamilar Katchi leader Seeman heavily praises actor Soori, director Mathimaran Pughazhendhi, and GV Prakash for bringing sea-based Tamil culture to life in 'Mandaadi'.

இப்படத்திற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.
சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.
பாராட்டிப் பதிவிட்டிருக்கும் அவர், "கடலோடு பிறந்து, அலையோடு வளர்ந்து, புயலோடு போரிட்டு வாழும் நம் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வியலையும், வீரத்தையும், மரபையும் திரைமொழியில் உயிர்ப்பித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தமிழ் மக்கள் பேரன்போடு வரவேற்றுக் கொண்டாடி வருவது அளப்பரிய மகிழ்ச்சியளிக்கிறது.
கடல்சார் வாழ்வியலான பாய்மரப் படகுப் போட்டியைப் பெருந்திரையில் பெருமையோடு பதிவு செய்திருக்கும் ‘மண்டாடி’, தமிழ்த் திரையுலகில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது.
கதைநாயகனாக நடித்திருக்கும் என் அன்புத்தம்பி சூரி, தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு கலைப்பயணத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார்.
‘மண்டாடி’ திரைப்படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மக்கள் தங்கள் பேரன்பால் அங்கீகரித்துக் கொண்டாடுவது தம்பி சூரியின் கலைப்பயணத்திற்குக் கிடைத்த மகத்தான வெகுமதி.
நம் மண்ணுக்கே உரித்தான கடல்சார் வாழ்க்கையையும், கடலோடி மக்களின் வீர விளையாட்டையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்து, அதனைப் பெருந்திரைக்கான படைப்பாக வடித்திருக்கும் என் அன்புத்தம்பி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கடல் அலையின் பேரிரைச்சலையும், போட்டியின் பரபரப்பையும், மண்ணின் மணத்தையும், மனிதர்களின் உணர்ச்சியையும் தனது இசையின் வழியே பார்வையாளர்களின் இதயத்திற்குக் கடத்தி, ‘மண்டாடி’யின் உணர்வுக்கும் வேகத்திற்கும் தனது இசையால் உயிரூட்டியுள்ள என் அன்புத்தம்பி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
கரையிலிருந்து கடலைப் படம் பிடிப்பதோடு நின்றுவிடாமல், கடலுக்குள் சென்று அலைகளோடும் படகுகளோடும் பயணித்து அதன் பேரழகையும் பேராற்றலையும் திரையில் உயிரோவியமாகப் பதிவுசெய்துள்ள ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஒரு படைப்பின் கனவை நம்பி, அதற்குத் தேவையான பெரும் பொருட்செலவையும் தயங்காது ஏற்று, மிகப்பெரிய படைப்பாக ‘மண்டாடி’யைத் தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் துணிவும் கலை மீதான நம்பிக்கையும் மிகுந்த பாராட்டுக்குரியது.
உலகத்தின் கதைகளைத் தமிழில் சொல்வதைக் காட்டிலும், தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே தமிழ்த் திரையுலகின் பெருவெற்றியாகும். அத்தகைய படைப்புகளைத் தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்.
தங்கள் பேரன்பால் தோளில் தூக்கிச் சுமப்பார்கள் என்பதற்கு ‘மண்டாடி’ திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் மக்களின் கொண்டாட்டமே சான்றாகும்.
‘மண்டாடி’ திரைப்படத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த தம்பி சூரி, அண்ணன் சத்யராஜ், சுஹாஸ், தம்பி பால சரவணன், நாயகி மகிமா, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இசையமைத்த ஜி.வி. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் அன்பு நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
