Lifestyle and human interest
202 ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் விற்பனை-

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புறத்தில் உள்ள 202 கூட்டுறவு ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காய விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை பெய்யாததால் விவசாய பணிகள், உணவு உற்பத்தி, பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்துார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேவை அதிகரித்து வெளிச்சந்தைகளில் பெரிய, சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.100ஐ கடந்தது. ஏற்கெனவே சர்க்கரை விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வெங்காய விலை உயர்வு அச்சத்தை துாண்டியது. சர்க்கரை, வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு ரேஷன் கடைகளிலும் கிலோ வெங்காயம் ரூ.35க்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் செப்.,3 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 டன் வெங்காயம் இறக்குமதியானது. அவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அதிகாரிகள் பிரித்து அனுப்பினர். மாவட்டத்தில் நகர்புறத்தில் செயல்படும் 202 ரேஷன் கடைகளில் நேற்று முதல் மானிய விலையில் வெங்காய விநியோகம் துவங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,'தேவையை பொறுத்து அடுத்த கட்டமாக வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும்.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து கடைக்காரர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
