Lifestyle and human interest
வெங்காயம் வாங்க கூட்டம் அலைமோதல்... ரேஷன் கடைகளில் ரூ.35க்கு விற்பனை

வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விழுப்புரம் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் இன்று முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், வெளிச்சந்தையில் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக தமிழக அரசு 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது.
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள 118 ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 10 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டு, கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அதிகபட்சமாக 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படுகிறது. நகர்ப்புற ரேஷன் கடைகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே வெங்காயம் வரத்து வந்துள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வெங்காயம் வழங்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
