Health
காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார பணிகள் அவசியம்
திருத்தணி: ‘திருத்தணியில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க, சுகாதார பணிகள் மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் கலந்த தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்’ என, வட்டார மருத்துவர் கலைவாணி அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களின் ஆலோசனை கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி பேசியதாவது:
பருவமழை விரைவில் துவங்க உள்ளதால், முன்னெச்சரிக்கையாக ஊராட்சி செயலர், பம்ப் ஆப்பரேட்டர்கள், குடிநீர் தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
தற்போது, அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு, வீடாக சென்று சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீரில், கழிவுநீர் கலந்தால் உருவாகும் காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல் போன்றவற்றை தடுக்க, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.