Religion
முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
திருக்கழுக்குன்றம்: முள்ளிகொளத்துார் ஈகையில் உள்ள முத்தாரம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் பகுதியில், முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் தசரா உத்சவத்தில், பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் திரள்வர்.
அதேபோல் திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் வசிக்கும் முத்தாரம்மன் பக்தர்கள், இங்கு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் அமைக்க முடிவெடுத்தனர்.
அதன்படி, அறக்கட்டளை சார்பில் திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துார் ஊராட்சி, ஈகை ரத்தினாபுரம் புறவழி சாலை சந்திப்பில் முத்தாரம்மன் கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலின் மஹாகும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. நேற்று காலை நான்காம்கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சன்னிதி விமானங்கள் மற்றும், மூலவர் சுவாமியருக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.