Religion
புதுப்பொலிவு பெற்ற ரணபலி முருகன் கோவில்... கும்பாபிஷேகத்தில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான ரணபலி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான ரணபலி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், புனித நீர் கலசத்தை தெளித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் செல்லும் வழியில் பெருவயல் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனமர்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இக்கோவில், கடந்த ஆண்டு முதல் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 4-ம் தேதி விநாயகர் பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஐந்து கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாகுதி பூஜை நடைபெற்றன.
யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பரம்பரை தர்மகர்த்தா சேதுபதி ராணி ராஜ ராஜேஸ்வரி நாச்சியார் முன்னிலையில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ட்ரோன் மூலமாக பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரணபலி முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரணபலி முருகனை வணங்கிச் சென்றனர்.
