Religion
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை, 7:40 மணி முதல், 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக, நேற்று கோவிலின் பரிவார மூர்த்திகள் எனப்படும், இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை, 12வது கால யாகசாலை பூஜைக்கு பின், புனித நீர் புறப்பாடு நடக்கிறது. காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பா பிஷேகம் நடக்கிறது.
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று இரவு, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு வரை கோவிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை.
மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மீனாட்சி கோவிலை சுற்றி ஆபத்தான நிலையில் உள்ள, 37 பழமையான கட்டடங்களை கண்டறிந்து, அவற்றை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.