Religion
பட்டத்தரசியம்மன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிஷேகம்
அன்னூர்:பிள்ளையப்பம்பாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 13 ம் தேதி நடைபெறுகிறது.
பிள்ளையப்பம்பாளையத்தில் உள்ள விநாயகர், முருகர், பட்டத்தரசி அம்மன், மீனாட்சி அம்மன், கருப்பராயசாமி, கன்னிமார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டன.
இதையடுத்து மீண்டும் திருப்பணி செய்யப்பட்டது. மகாலட்சுமி, வாராகி அம்மன், துர்க்கை அம்மன், மகேஸ்வரி, வைஷ்ணவி, சாமுண்டி, முனியப்ப சாமி ஆகிய தெய்வங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா இன்று காலை துவங்குகிறது, மதியம் 12:15 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.
நாளை (12ம் தேதி) காலை 10:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசங்கள் நிறுவுதலும், தெய்வங்களை பீடத்தில் வைத்தலும், மாலையில் முளைப்பாரி எடுத்து வருதலும் நடைபெறுகிறது.
வருகிற 13ம் தேதி காலை 7:30 மணிக்கு, விநாயகர், முருகர், பட்டத்தரசி அம்மன், மீனாட்சி அம்மன், கருப்பராயசாமி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையடுத்து மகாபிஷேகம், தச தரிசனம், அலங்கார பூஜை நடைபெறுகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகின்றனர்.
மாலையில் சுவாமி திருவீதியுலாவும், இரவு 8:30 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.