Religion
மீனாட்சி கோயில் கும்பாபிஷேக நாளில் ஈ.வெ.ரா.,வுக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியா? காங்.,ல் இது புதுசா இருக்கே என நிர்வாகிகள் அப்செட்

மதுரை: மதுரையில் இன்று (செப்.,17) நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக நேரத்தில், காங்., சார்பில் ஈ.வெ.ராமசாமி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபி ேஷகம் 17 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என திட்டமிடப்பட்டு 10 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து பெரிய அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 'காங்., சார்பில் இன்று ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு தல்லாகுளம் அவுட்போஸ்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு காலை 9:00 மணிக்கு மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மாலையிட்டு மரியாதை செலுத்துகிறார். அதையொட்டி கட்சி தொண்டர்கள் வருகை தர வேண்டும்' என நகர் தலைவர் நல்லமணி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
காங்., நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை என்றாலே உலகளவில் மீனாட்சி அம்மன் தான் பிரதான அடையாளம். அந்த கோயில் கும்பாபிஷே கத்தை தரிசிக்க காங்., நிர்வாகிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தயாராக உள்ள நிலையில், அதே நேரத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு கட்சி ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளது வருத்தமாக உள்ளது.
காங்., கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை போன்றோரின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு இதுவரை மதுரையில் காங்., மரியாதை செலுத்தியது இல்லை. இப்போது த.வெ.க.,வின் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் இப்படி செய்கிறார்களா. ஈ.வெ.ராமசாமி காங்கிரசில் இருந்தவர் என அவரை புகழ்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்மிகத்திற்கு எதிரான நிலைப் பாட்டில் இருந்த ஈ.வெ.ராமசாமியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, மதுரையின் காக்கும் தெய்வமான எங்கள் மீனாட்சி அம்மனின் கோயில் கும்பாபிஷே கத்தை விட்டுக் கொடுத்து விட்டு செல்ல முடியாது. இதுபோன்ற விஷப்பரிட்சைகளில் காங்., இனிமேல் இறங்க வேண்டாம் என்றனர்.