சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கல்
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் ‘லோக் கல்யான் மேளா’ என்ற பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘லோக் கல்யான் மேளா’ சிறப்பு முகாம், கடந்த செப்.,1 ம் தேதியில் இருந்து 3 ம் தேதி வரை நடந்தது.
முதல் தவணை கடனாக, ரூ.15 ஆயிரம்; இரண்டாம் தவணையாக, ரூ.25 ஆயிரம்; மூன்றாம் தவணையாக, ரூ. 50 ஆயிரம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி கமிஷ்னர் பானுமதி, நகரமைப்பு அலுவலர் திலகவதி ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் வழங்கினர்.
நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, மொபைல் போனுடன் இணைந்த ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், புகைப்பட நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் வரும், 15 ம் தேதியிலிருந்து 17 ம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.