Religion
கும்பாபிஷேக ஏற்பாடுகளில் அரசியல் அறங்காவலர்கள் குற்றச்சாட்டு
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்றம் உத்தரவுபடி கும்பாபிஷக கல்வெட்டில் அறங்காவலர்கள் பெயர் இடம்பெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர்கள் குற்றம்சாட்டினர்.
முன்னாள் தி.மு.க., அமைச்சர் தியாகராஜனின் தாயாரும், அறங்காவலர் குழுத்தலைவருமான ருக்மணி, அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், சுப்புலட்சுமி கூறியதாவது: ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டும் என்ற பெருந்தன்மையுடன் ஆட்சியாளர்கள் செயல்படவில்லை.
கும்பாபிஷேக ஏற்பாடுகளில் எங்களிடம் ஆலோசிக்காமல் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது.
2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு வீர வசந்தராயர் மண்டபத்தை அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் மறைவுக்குப் பிறகு நாங்கள் பொறுப்பேற்று புனரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டோம். விழா சிறப்பாக நடக்க வேண்டிய நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் அறியும் வகையில் வெளியிடப் பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நன்கொடையாளர்கள், உபயதாரர்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டு விட்டதா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. விழாவில் யாரெல்லாம் விடுபடக்கூடாது என்பதற்கான பட்டியலை அறங்காவலர் குழு சார்பில் தயாரித்து வைத்திருந்த போதிலும், அதனை கோயில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. ஆன்மிக பணிகளில் அரசியல் கலந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது என்றனர்.