உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க பி.ஏ.பி. பாசன விவசாயிகள் எதிர்ப்பு
திருப்பூர்:தாராபுரம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி. தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பி.ஏ.பி. திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமையில் 40 பாசனசபை நிர்வாகிகள், கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்து மனு அளித்தனர்.
தாராபுரம் தாலுகாவிலுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கமிஷன் மற்றும் கோர்ட் உத்தரவுகளை மீறி உப்பாறு அணைக்கு பி.ஏ.பி. நீரை திறக்கக் கூடாது.
குடிநீருக்காக என்ற போர்வையில், திட்டக்குழுவின் சம்மதம் பெறாமல் தண்ணீர் திறக்க அரசாணை பெற பரிந்துரைத்திருப்பது தவறு. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. 2-ம் மண்டல பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஒரு லட்சம் ஏக்கர் தென்னை மரங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.
பி.ஏ.பி. திட்டத்துடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கூடாது. தாராபுரம் இடைத்தேர்தலுக்காக, 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயக்கட்டு விவசாயிகளை பலி கொடுக்கக் கூடாது. உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து திட்டக்குழு தலைவர் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கூடாது என, திருப்பூர் கலெக்டரை சந்தித்து, விரிவாக எடுத்துக்கூறினோம். ஆனால், கலெக்டர் எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. ஆகவே, நாளை (இன்று) காலை, 10:00 மணி முதல், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலுள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.