Politics
இடைத்தேர்தலுக்கு ஆதரவை திரட்டும் அதிமுக; ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் செப்டம்பர் 16ஆம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வேட்புமனுத் தாக்கல் இன்று இன்று (09-09-26) தொடங்கியுள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கிடையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தோழமைக் கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது. ஏற்கெனவே பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆதரவு கோரியதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் அதிமுக ஆதரவு கோரியுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள ஏ.சி.சண்முகம் இல்லத்தில் அதிமுக தலைவர்களான கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியுள்ளனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தரை சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)