கள்ளக்குறிச்சியில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
இத்திட்டத்தில் சேர்பவர்கள் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள, நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகள், கோழிக்கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பு மற்றும் நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தேடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2023–24, 2024–25, 2025–26ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன் அடைந்திருக்க கூடாது. பயனாளிகள் 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை தேசிய மயமாக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி பயனாளிகளுக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன் வந்தால், திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக அவரது நிதி ஆதரவு வங்கி கணக்கில் தொகை இருப்பு நகல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகைய தகுதி உடைய பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தினை பெற்று உரிய விபரங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.