Politics
கொள்முதல் நிலையம் தொடங்காததால் திறந்தவெளியில் குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகள் தம்மனுாரில் மழையில் நனைவதால் விவசாயிகள் அவதி

வாலாஜாபாத்: தம்மனுாரில் கொள்முதல் நிலையம் தொடங்காததால், திறந்தவெளியில் குவிக்கப்பட்டுள்ள அறுவடை செய்த நெல்மணிகள், நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நனைவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரம், தம்மனுார் கிராமத்தை சுற்றி நெய்க்குப்பம், கம்பராஜபுரம், வள்ளிபுரம், இளையனார்வேலூர், சித்தாத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
தம்மனூரில் ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்திற்கும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவது வழக்கம். தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கு இப்பகுதியில் ஒரு மாதமாக நெல் அறுவடை பணி நடைபெறுகிறது.
எனினும், இதுவரை நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்மணிகளை விற்பனைக்காக அப்பகுதியில் வழக்கமாக இயங்கும் நெல் கொள்முதல் நிலைய பகுதியில் குவித்து வைத்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்வதால் நெல்மணிகளை பாதுகாப்பதில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழையில் நனைந்து ஈரமாகும் நெல்மணிகளை மீண்டும் உலர வைத்து பதப்படுத்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து, தம்மனுார் விவசாயிகள் கூறியதாவது:
தம்மனூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மாதமாக நெல் அறுவடை பணிகள் நடைபெறுகின்றன. 12 ஆயிரம் மூட்டைக்கான நெல்மணிகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்காததால் அறுவடையான நெல்மணிகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகள் பாதிப்பை கருதி, தம்மனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.